பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/512

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

500

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



உலகாயத அடிப்படையில் உடலுக்கு வேறாக உயிரை நம்புவதில்லை. இந்த உடலுக்கு முந்தியதாகவோ, அல்லது பிந்தியதாகவோ யாதொன்றும் இல்லை. அதாவது உயிர் இல்லை என்பதே அவர்கள் கோட்பாடு. உயிரும், உடலும் ஒன்றே என்பது இக்கொள்கை “ஐம்பூதக் கூட்டினாலாகிய (நிலம், நீர், தீ, வளி, ஆகாயம்) இந்த உடம்பு தோன்றும் பொழுதே, அந்தக் கூட்டின் விளைவாக, உடலுக்கு உணரும் சக்தியும், சிந்திக்கும் சக்தியும் கிடைக்கிறது. அந்த இயக்கத்திற்கு அறிவு உண்டு: உணர்வு உண்டு” என்பதே இக்கொள்கை. “இந்தப் பொருட் சார்பு வலிமை குறையும் பொழுது, அந்த ஆற்றலும் குறைந்து போகின்றது. பின் மரணம் வருகிறது” என்பதும் அக்கொள்கை. அதற்கு அவர்கள் எடுத்துக் காட்டும் உதாரணம் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகியவற்றின் கூட்டு ஏற்படும் பொழுது ஏற்படும் சிவப்பு வண்ணம் போல இந்தப் பூதங்களின் கூட்டால் உணர்வு ஏற்படுகிறது என்பதே. வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு இவற்றின் கூட்டால் ஏற்படும் வண்ணம் நிலத்திற்கு நிலம், இனத்திற்கு இனம், மொழிக்கு மொழி வேறுபாடுடையதாக இருப்பதில்லை என்பதை உணராதது ஏனோ ? வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு குப்பன் கூட்டினாலும், குப்புசாமி சாஸ்திரி கூட்டினாலும் குயின் கூட்டினாலும் குயின்டாங் கூட்டினாலும் வண்ணம் ஒரு தன்மைத்தே வேறுபாடுகள் இல்லை. அது போலவா, மனிதனின் சிந்தனை இருக்கிறது? உணர்வு இருக்கிறது? ஓரிடத்தில் பத்துப்பேர் இருந்து வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு போட்டால், வண்ணம் ஒன்றேயாம். ஆனால், அந்தப் பத்துப்பேரின் உணர்வு ஒன்றல்ல; அது மட்டுமன்றிக் காலத்திற்குக் காலம் இந்த வண்ணம் வேறுபட்டதாகவும் - வரலாறு இல்லை. வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பைக் கூட்டக் கற்றுக் கொண்ட காலம் முதல், இன்று வரையில்