பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


‘திருக்குளத்தைக் கண்ணிரண்டுமில்லாத குருடராக வாழ்ந்த தண்டியடிகள் துர்வையெடுத்துத் தூய்மை செய்த அரும்பெரும் சாதனையைச் சேக்கிழார் செஞ்சொற் காப்பியமாக வடித்துத் தந்துள்ளார்.

விழவுமலி வாழ்க்கை

தமிழ் மக்கள் விழாக்கள் எடுப்பதில் விருப்பமுடையவர்கள். விழவு நிறைந்த வாழ்க்கை தமிழர் வாழ்க்கை திருக்கோயில் நாகரிகம் மிகவும் சிறப்புற்று விளங்கியது, மருத நிலத்திலேயேயாம். மருத நிலத்து மக்களுக்கு இயல்பாகவுள்ள பழக்கம் விழாவயர்த்தல், திருவாரூர்த் திருக்கோயிலில் விழா நிகழ்ந்ததைத் திருப்பல்லாண்டு எடுத்துக் கூறும்.

“குழல்ஒலி யாழ்ஒலி கூத்தொலி ஏத்தொலி
எங்கும் குழாம்பெருகி
விழவொலி விண்ணளவும் சென்று விம்மி
மிகுதிரு வாரூரின்
மழவிடை யாற்கு வழிவழி ஆளாய்
மணம்செய் குடிப்பிறந்த
பழஅடி யாரொடும் கூடிஎம் மானுக்கே
பல்லாண்டு கூறுதுமே!”

என்பது திருப்பல்லாண்டு! சுந்தரமூர்த்தி நாயனார் திருவொற்றியூரில் சங்கிலியாரை மணந்து இருந்த நாளில், திருவாரூர் வசந்த விழாவை நினைந்து திருப்பதிகம் பாடினார் என்பது வரலாறு. திருவாரூர் வசந்த விழா, புகழ்பெற்ற விழா. திருஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும் பார்த்துப் பாராட்டிய விழா! விழாக் காலங்களில் விழா நிகழும் ஊர்களில் உள்ள இல்லங்களில் எல்லாம் விருந்தினர் சூழ்ந்து வந்திருப்பர். எங்கும் வெள்ளம்போல் கூடி ஆட வரும் மகளிரும் பெருமானுக்குத் திருவிழா எடுத்து மகிழ்வர். பெருமானின் திருவிதியுலா, நையாத மனத்தினரையும்