பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

47


தக்கனஅல்ல. “முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னால் முடியும்” என்பது மாணிக்கவாசகர் திருவாக்கு. ஆதலால், வாழ்க்கைக்குப் பொருள் இன்றிஅமையாதது. திருக்கோயில் மற்றவர்களிடமிருந்து பெறவும் செய்தது. அதுபோலவே நாடி வந்தாருக்குத் தானும் வழங்கியது. இறைவன், திருவாவடு துறையில் திருஞானசம்பந்தருக்குப் பொற்கிழி தந்தருளினன்; திருவீழி மிழலையில் வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்கள் துயர் நீங்க, திருஞானசம்பந்தரும் அப்பரடிகளும் பணி செய்ய, நாள்தோறும் படிக்காசு தந்தருளினன்.

“கால நிலைமை யால்உங்கள்
கருத்தில் வாட்ட முறிர் எனினும்
ஏல உம்மை வழிபடுவார்க்
களிக்க அளிக்கின்றோம் என்று
கோலம் காண எழுந்தருளிக்
குலவும் பெருமை இருவருக்கும்
ஞாலம் அறியப் படிக்காசு
வைத்தார் மிழலை நாயகனார்”

என்பது பெரியபுராணம். ஆதலால், திருக்கோயில் சூழலில் வாழ்தல், வளமான வாழ்க்கையாகவே அமைந்திருந்தது.

மரணத்தை வெல்லல்

வாழ்க்கை, வாழ்வதற்கே! சாவதற்கல்ல! மரணத்தை வென்று வாழ வேண்டும். .

“சுற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவற்கு”

என்ற வள்ளுவம் நோக்குக! திருக்கோயில் தத்துவத்தைச் சார்ந்து, திருக்கோயில் கோட்பாட்டின்படி வாழ்கிறவர்கள், மரணத்தையும் வென்று வாழ்வார்கள்! திருக்கடவூர்த் திருக்கோயில் இறைவனைப் பூசித்து வாழ்ந்தவர் மார்க்கண்டேயர்.