பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

49


தவிர்க்க வேண்டும். திருக்கோயில், சமுதாயத்தின் நல்லமைப்புக்கு எதிராக இருக்கிற தீமைகளிலிருந்து மக்களை விடுதலை செய்ய வேண்டும். அதாவது சாதி வேற்றுமை, தொழில் வேற்றுமை, தீண்டாமை பாராட்டுதல் முதலிய தீமைகளிலிருந்து மீட்கவேண்டும். திருக்கோயில் ஒரு சுரண்டும் நிறுவனமாக வளர்வது, திருக்கோயில் தத்துவத்திற்கே முரணானது! அதனால், நாடு கெடும். பொதுமை நெறிக்கு மாறான ஒரு மேலாதிக்கக்குடி திருக்கோயிலைச் சார்ந்து தோன்ற அனுமதிக்கக் கூடாது.

திருக்கோயிலைச் சார்ந்தவர்கள் அனைவரும் தொண்டர்கள். திருக்கோயிலைச் சார்ந்து, மீண்டும் திருநெறிய தொண்டு உயிர்ப்புப் பெறுதல் வேண்டும். திருக் கோயிலிலிருந்து வெளியேற்றப்பட்ட ஊராட்சி மன்றங்கள், கல்விச்சாலைகள், மருத்துவச் சாலைகள் மீண்டும் திருக்கோயில் வளாகத்துக்குள் வந்தாக வேண்டும். நாம் ஒவ்வொரு வரும் திருக்கோயிலுக்குக் கடமைப்பட்டிருக்கிறோம். நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகள்!

திருக்கோயிலின் அசையும் சொத்து, அசையாச் சொத்துக்களின் பட்டியல் மட்டும் இருந்து பயன் என்ன? திருக்கோயிலில் நம்மவர் பதிவேடு இருக்க வேண்டும். நம்மவர் வாழ்க்கை நிகழ்வுகளைத் திருக்கோயிலிலேயே செய்ய வேண்டும். நாம் ஒவ்வொருவரும் திருக்கோயிலுக்குரிய கடமைகளை-அவை எத்தகையவாக இருந்தாலும் தவறாது செய்தல் வேண்டும். ஆண்டுதோறும் ஈட்டிய செல்வத்தில் ஒரு பகுதியினைத் திருக்கோயிலுக்கு உளமார மனமுவந்து செலுத்தவேண்டும். இங்ஙனம் செலுத்துவதன் மூலம் திருக்கோயில் நிதிநிலை சீராகும். இது நடைமுறைக்கு வந்தவுடன் அருச்சனைச் சீட்டு முறைகளை (வணிக முறைகளை) அறவே நீக்க வேண்டும். சிக்கனமாகச் செலவழிக்கப் பெறவேண்டும். திருத்தொண்டின் மூலமே,