பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்ற உலக நீதிப் பாடல் அடியும் திருக்கோயில்கள் தமிழ் மக்களின் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருந்தன என்பதற்குச் சான்றாக விளங்குவன.

தமிழர்கள் திருவுருவ வழிபாட்டில் அசைவிலா நம்பிக்கையுடையவர்களாய் விளங்கி வருகின்றனர். தமிழர்கள் தீவிரமான பக்திநெறி நிற்பவர்கள், அவர்கள் தாங்கள் விரும்பும் ஒரு பொருளிடத்தில் கடவுளாற்றலை - உருவகப்படுத்திக்கொண்டு பத்திமை செய்பவர்கள்.

திருக்கோயில்கள் பரம்பொருளை உணர்வதற்குக் கருவியாகவும் பக்தி நெறியைப் பரப்புவதற்குச் சாதனமாகவும் விளங்கி வருகின்றன. ஆதலால், நமது இந்திய நாட்டில் இந்துமதக்கோயில்களின் எண்ணிக்கை மிகுதி. இத்திருக்கோயில்களைக் கட்டும் பணி கிறித்து பிறப்பதற்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் தொடங்கப்பெற்று விட்டது என்பதை வரலாறும் இலக்கியமும் எடுத்துக் காட்டுகின்றன. கடல் கொண்ட தென்குமரிக் கண்டத்திலிருந்த தென்மதுரை என்ற நகரத்தில் நகரமனைய திருக்கோயில் இருந்ததைப் புறநானூறு பேசுகிறது. குமரியாறு கடல் கொள்ளப்படுவதற்கு முன்னும், தென்குமரி நாட்டில் பஃறுளியாறு கடல் கொள்ளுவதற்கு முன்னும் எழுந்த பாடல்கள் புறநானூற்றில் உள்ளன. பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி பஃறுளியாறு கடல் கொள்ளப்படுவதற்கு முன் திகழ்ந்தவன். முக்கட் பெருமான் என்னும் முழுமுதற் கடவுளொருவருக்கே இம்மன்னன் வணக்கம் காட்டும் இயல்பினன் என்றும், அக்கடவுள் முனிவர்களால் பரவப் பெறுபவர் என்றும், அப்பெருமானுக்கு ஒரு நகரத்தைப் போல் அகன்று உயர்ந்து அமைந்த திருக்கோயில் அவ்வளவு பழங்காலத்திலேயே இருந்தது என்றும் அறிகின்றோம். முதுகுடுமிப் பெருவழுதியைப் பற்றி வருகின்ற புறப்பாட்டில்,