பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வாழ்தல் அவருக்கும் பெருமை; அவரைச் சார்ந்த மற்றவர்களுக்கும் பயன்தரும், ஒரு நல்ல இசைக்கலைஞன் இனிமையாகப் பாடும் பொழுது அவனுக்குப் பெருமை: மகிழ்ச்சி, இன்பம்! அந்த இசையமுதைத் துய்த்து மகிழும் மற்றவர்களுக்கும் களிப்பு; மகிழ்ச்சி, இன்பம்! ஆதலால் வாழ்க்கைக்குக் கலை இன்றியமையாதது. கலைநலம் சான்ற வாழ்க்கையில்தான் அன்பு இருக்கும்; அமைதி இருக்கும்; இன்பம் இருக்கும்.

வாழ்தல்!-இஃது ஒர் அருமைப்பாடான கலை. “பிழைத்தல்” வாழ்க்கையன்று. வாழ்க்கையில் வழங்கப் பெற்றுள்ள வாய்ப்புகள் அனைத்தும் முழுமையாகப் பயன்பட வேண்டும். வாழ்க்கை ஒரு சுமையாக இருத்தல் ஆகாது. எவ்வளவு நெருக்கடியான துன்பச் சூழலிலும் பரித்து மகிழ்ந்து வாழ்தலே வாழ்க்கை அழுது புலம்புவது அவலம்! வாழ்க்கை, கலையாக அமைய வேண்டுமானால் வந்து சூழ்ந்துள்ள துன்பங்களுக்குரிய காரண காரியங்களை ஆராய்ந்தறிய வேண்டும். துன்பங்களுக்கெல்லாம் காரணம், பெரும்பாலும் முறையாக வாழாமையேயாம்! ஒருவரைக் காணல், ஒருவர் சொல்வதைக் கேட்டல், ஒருவரோடு பேசுதல் முதலிய நிகழ்வுகள் துன்பத்திற்கும் இன்பத்திற்கும் காரணமாய் அமைந்துவிடுகின்றன. “முகனமர்ந்து இனிது நோக்குதல்” என்பது திருக்குறள், கண்கள் ஆயிரம் ஆயிரம் கூறும். கண்களால் வளர்ந்த கதைகளும் உண்டு, கண்களால் விளைந்த தீமைகளும் உண்டு. ஆதலால், பரபரப்பின்றி, அமைதியான, மகிழ்ச்சி நிறைந்த குளுகுளுப்பைக் கண்களால் காட்டுதல், காண்பவர்களுடன் நெடிய இனிய உறவை வளர்த்துக் கொள்ளுதல், பார்வைக் கலையின் இலக்கணம்.

மற்றவர்களின் மீது கூறும் குறைகளைக் கேளா திருத்தல், கோள் கேளாதிருத்தல் ஆகியன கேட்டறிதலின்பால் உள்ள கலைத்திறன். இனியனவே பேச வேண்டும்; மற்றவர் குணமே கூறவேண்டும்; முகமன் கலவாத புகழ் கூற