பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

55


வேண்டும். இது பேசும் கலை. பொறிகள் ஐந்தும் பண்பட்ட நிலையில் பழக்கப்படுத்தப் பெற்றால் மனம் தூய்மை ஆகும்; புத்தி புண்ணியச் செயலில் ஈடுபடும்; சித்தம் அழகுடன் விளங்கும். இந்த நிலையில் வாழ்வே கலை, கலையே வாழ்வு; வாழ்வே சமயம், சமயமே, வாழ்வு என்றாகிறது.

சமயம் என்பது ஒரு தத்துவம்; ஒரு கொள்கை, ஒரு கோட்பாடு. அது வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட தத்துவமன்று. சான்றோர் வாழ்க்கையினின்றும் பிறந்தது சமயம். வாழ்க்கையை வழி நடத்துவது சமயம், சமயம், ஒரு வாழ்க்கை முறை. அதனால், சமயம் என்பது திருநெறி; தவநெறி; துரநெறி; நன்னெறி, அருள் நெறி; சன்மார்க்கம் என்றெல்லாம் அருளாசிரியப் பெருமக்களால் பாராட்டப் பெற்றுள்ளது. நெறியென்றால் வழி. உயிரும் உணர்வும் செல்லும் ஆறு! ஆதலால் நெறி என்று கூறப் பெறுகிறது! இறையருளை நாடிச் செல்லுவோர் செல்லும் நெறி திருநெறி. புலன்களிலே அழுக்கின்றித் துய்மை வழிச் செல்லும்நெறி தூ நெறி, வஞ்சப் புலனைந்தைப் பக்குவப்படுத்த ஏற்கும் நெறி தவநெறி. எங்கும் எல்லாவற்றிலும் எப்பொழுதும் நன்மையைக் காணவும் நன்மையைச் செய்யவும் விரும்பிச் சென்றிடும் நெறி நன்னெறி, யார் மாட்டும் எவ்வுயிர்க்கும் தடையிலா அன்பைக் காட்டும் ஒழுக்கத்தினை ஏற்கும் நெறி, அருள் நெறி. இதுவென்றும், அதுவென்றும், நன்றென்றும் தீதென்றும் சமய பேதாபேதங்களில் ஈடுபடாது, சமயங்களைக் கடந்த பொதுநிலை நின்று வாழ்வோர் ஏற்பது சன்மார்க்க நெறி. ஆக, வாழ்க்கையில் நாகரிகம், பண்பாடு, சான்றாண்மை ஆகியன பொதுள வேண்டுமானால் சமயம் சார்ந்த வாழ்க்கை தேவை. சமயம் சார்ந்த வாழ்க்கைக்கு எளிதில் இட்டுச் செல்வது கலை, கலை சமயத்திற்கு ஆதாரம். சமயம் கலைக்கு ஆதாரம், இரண்டும் மானுடத்தை வளர்க்கும் தகையன.