பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தூய்மை. திருக்கோயில் பேணல் ஒரு கலைத்தொண்டு. திருக்கோயில் பேணல் ஒரு வரலாற்றை இயக்கும் தொண்டு. திருக்கோயில் நிறுவனம் அன்று: அஃது இயக்கம், அஃது ஒரு கலைச் சூழல், நமது வாழ்வியலோடு கலந்த கலைச் செல்வமாகிய திருக்கோயிலை நாளும் பேணுவோமாக!

[1] திருக்கோயில் பூசனை எல்லாரும்
செய்யலாமா? - ஓர் ஆய்வு

ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ள செய்தி மிகவும். கவனத்துடன் சிந்தித்து முடிவு காண வேண்டிய ஒன்று. இன்றைக்கு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆதி சைவத் திருமேனி கொண்டு எழுந்தருளிய குருமூர்த்திகளால் காணப்பெற்று, இன்றளவும் - சிவாகம நெறியையும், செந்தமிழ் நெறியையும் முறையே போற்றிப் பாதுகாத்து வரும் நமது ஆதீனத்தின் வழிவழிப் பொறுப்புகளுக்கு ஏற்பவும், வளர்ந்து வந்துள்ள இன்றைய சமுதாயத் தேவைகளுக்குத் தீர்வு காணத்தக்க வகையிலும், சிந்தித்து முடிவு செய்ய வேண்டும்.

ஆய்வுக்குரிய அளவைகளை முடிவு செய்து கொண்டால்தான் ஆய்வு செப்பமாகச் செய்ய இயலும், அப்போதுதான் ஆய்வு, சார்பு வழி அமையாது. நடுவு நிலையில் நடைபெறும். எந்த ஒரு கருத்தையும் ஆய்வு செய்ய, வரலாறு முதல் அளவையாக எடுத்துக் கொள்ளப் பெறுதல் வேண்டும். இரண்டாம் இடத்திலேயே நூல்கள் எடுத்துக் கொள்ளப் பெறுதல் வேண்டும். நூல்களுள்ளும் காலத்தால் பிந்தித் தோன்றியவை யாயினும் தகுதியால் சிறந்த நூல்களே அளவை நூல்களாக எடுத்துக் கொள்ளப் பெறுதல் வேண்டும். வரலாற்று வளர்ச்சியின் அடிப்படையிலும் காலத்தின் தேவைகளுக்கு ஈடு தரும் வகையிலும்


  1. *தமிழ் நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை வல்லுநர் குழுவிற்கு 22-11-1980-இல் அளித்த அறிக்கை.