பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


“வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்” என்று அப்பரடிகளும் சொல்லி யிருக்கிறார்கள். இவற்றை எண்ணி ஒற்றுமையைப் பேண வேண்டும். ஒற்றுமை உணர்வை உண்டாக்கக் கல்வியறிவு அவசியமானது. கல்வியில்லாத வாழ்வு காட்டு வாழ்வாகும். மற்றெல்லாச் செல்வங்களையும் விட, கல்விச் செல்வமே உயர்ந்ததென உயர்த்திப் பேசப்படுகிறது. “கேடில் விழுச் செல்வம் கல்வி” என்கிறார் வள்ளுவர். கல்வி இல்லையேல் சிந்திக்க இயலாது. சிறக்க இயலாது. கல்வி கற்கப் போதிய வசதி உங்களிடத்தில் இல்லாதது குறைதான், அக் குறையை நீக்கத் தோட்ட முதலாளிகள் முனையவேண்டும். அவர்கள் தொழிலாளிகளின் குழந்தைச் செல்வங்களைக் கல்விச் செல்வங்களாக்கினால் பொருட் செல்வத்தோடு புகழ்ச் செல்வமும் வந்தடையும்.

தொழிலாளர்களும் தமது குழந்தைகளைப் படிப்பிக்க ஆசைப்படவேண்டும். பட்டங்கள் பலபெற்றுப் பாரில் சிறக்க முடியாவிட்டாலும் பண்பாக வாழப் பழகி வாழவைக்கப் பழக்கக் கல்வி மிக அவசியம் தேவையானதென்பதை ஒவ்வொரு பெற்றோரும் உணரவேண்டும். படித்தும் முட்டாள்களாகத் திரியும் இந்தக் காலத்தில் படிக்காதும் போனால் என்ன ஆகும்?

படிப்பு பக்குவத்தைத் தருவதோடு பல்லுயிர்களோடு அன்பாக வாழவும் தூண்டுகிறது. நகரமும் நாடும் படிப்பு விஷயத்தில் போட்டி போடுகின்றன; நகரத்தைத் தோற்கடிக்கக் கிராமமும் கிராமத்தைத் தோற்கடிக்க நகரமும் போட்டி போடுகின்றன. இந்நிலையில் கெட்ட சிந்தனைகளைத் தோற்கடித்து நல்ல சிந்தனைகளை வளர்க்க உங்கள் குழந்தைகளுக்குக் கல்வி இன்றியமையாதது. சாப்பிடாமல் உயிர்வாழ முடியாதென்பதைப்போல் படிப்பில்லாமல் உயரமுடியாது. வேட்டி கட்டிக்கொள்வது தனிமனிதனின் மானத்தைக் காப்பதற்கு மட்டுமல்ல. சமுதாய ஒழுக்கத்துக்கும் பயன்படுகிறது. அதுபோலவே கல்வி தனிமனிதனின்