பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/110

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

தவத்திரு குன்றக்குடி அடிகளார்




17. [1]ஒருங்கிணைந்த கிராமப்புற வளர்ச்சி

துரை காமராசர் பல்கலைக் கழகம் “எதிர்வரும் இருபத்தோராம் நூற்றாண்டு” என்ற கருத்தரங்கு நடத்துவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இக்கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ள பல்கலைக் கழகத் துணைவேந்தர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களுக்கும் துறை இயக்குநர் ஜி.கே. பிள்ளை அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் நமது நன்றி! பாராட்டு! வாழ்த்துக்கள்! கருத்தரங்கில் இளைய தலைமுறையினைச் சார்ந்த பலர் பங்கு பெற்றிருப்பது மகிழ்வைத் தருகிறது. அதுவும் சமநிலையில் மகளிர் பங்கேற்றிருப்பது அதைவிடச் சிறப்பாகும்.

இந்தியா கிராமங்கள் நிறைந்த நாடு. தமிழகமும் கிராமங்கள் நிறைந்த மாநிலமாகும். இந்தியாவில் செல்வ வளத்தின் ஆதாரங்கள் கிராமப்புறங்களிலேயே அமைந்துள்ளன. இந்திய கிராமப்புறங்கள், நிறைந்த செல்வவளமும் மிக அதிகமான மனித சக்தியும் உள்ள பகுதிகளாகும். ஆனால் இந்திய நகர வாழ்க்கைக்கும் கிராம வாழ்க்கைக்கும் உள்ள இடைவெளி மிக அதிகமாகும். இந்திய கிராமங்கள் வறுமையில் உழலுகின்றன. இந்திய கிராமமக்கள் ஏழைகளாக இருக்கின்றனர். ஆறு ஐந்தாண்டுத் திட்டங்களை நிறைவேற்றிய பிறகும் கிராமப்புறங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்-வளர்ச்சி மனநிறைவுதரத் தக்கதாக இல்லை. இந்திய கிராமங்கள் அழிந்தால் இந்தியா அழியும்; இந்திய கிராமங்கள் வளர்ந்தால் இந்தியா வளரும், ஆதலால் இந்திய கிராமங்களின் வளர்ச்சியைத் திட்டமிட்டுச் செயற் படுத்தினால் சிறந்த இருபத்தோராம் நூற்றாண்டைக் காணமுடியும்.


  1. கடவுளைப் போற்று! மனிதனை நினை!