பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பயனுள்ளதாகும். கிராமப்புறங்களில் நிலத்தின் அளவுக்கேற்ப கால்நடைகள் வளர்க்கப்படவேண்டும். ஒரு ஏக்கருக்கு சராசரி 10 மாடுகளும் 50 ஆடுகளும் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் நிலம் உரப்படுத்தப்படும். விவசாயிக்கும் போதிய வேலை கிடைக்கும். போதிய வருவாய் கிடைக்கும். அத்துடன் சாண எரிவாயு அடுப்புகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் மரங்களை வெட்டாமல் தடுக்கலாம். 'வீட்டுக்கு ஒரு மரம்' என்று சொல்வது இந்தக் காலத்தில் போதாது. ஒருவருக்கு ஒரு மரம் வீதம் வளர்த்தல் வேண்டும். இந்தத் துறையில் குன்றக்குடி திட்டமிட்டுப் பணி செய்கிறது. எங்கள் குன்றக்குடிப் பள்ளி வளாகத்தில் ஒவ்வொரு சிறுவனும் சிறுமியும் ஒரு மரத்தை நட்டுப் பாதுகாக்கிறார்கள். 21-ம் நூற்றாண்டை நோக்கி கிராமங்கள் செல்ல வேண்டுமானால் தரமான கால்நடைகளை வளர்ப்பதோடு மரங்கள் நடுவதையும் வளர்ப்பதையும் கடமையாகக் கொள்ள வேண்டும்.

தொழில் வளர்ச்சி

கிராமப்புறத்தில் பகுதிநேர வேலை உடையவர்களுக்கும், வளரும் தலைமுறையினருக்கும் தொழில் நிறுவனங்களை அமைத்து வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். கிராமப்புறத்தில் உண்டாகிற தொழில் கூடுமானவரையில் கிராமத்தில் கிடைக்கும் பொருள்களை அடிப்படையாகக் கொண்டு அமைவது நல்லது. புதிய அறிவியல் தொழில் நுட்பம் கிராமத்திற்கு வந்தாகவேண்டும். பஞ்சாபில் லூதியானாவில் வீடுதோறும் இதை உணர்ந்திருக்கின்றனர். அதை முன் மாதிரியாகக் கொண்டு 21ஆம் நூற்றாண்டில் கிராமப்புறத்தைப் பாதிக்காத தொழில் வளர்ச்சியைச் செய்து, காலத்தின் பயன் போற்றுதல், திறமையைப் பயன்படுத்துதல், செல்வத்தைப் பெருக்குதல் ஆகியவற்றை ஒருங்கிணைந்த நிலையில் செய்யவேண்டும்.