பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

99



கிராமப்புறத்தில் மேற்போக்கான சில நாகரிகங்கள் இருந்தாலும் அதனுடைய அடிப்பரப்பில் இடைக்காலத்தில் ஏற்பட்ட ஏற்றத் தாழ்வுகள், செல்வ ஏற்றத் தாழ்வுகள், சாதி அமைப்புகள், பொருந்தாப் பழக்கங்கள் இல்லை என்று சொல்லிவிட முடியாது. இவற்றை மாற்றியமைக்க கிராமத்தின் அனைத்துச் சமூகப் பொருளாதார நிகழ்வுகளும் கூட்டுறவு மூலம் நடைபெற வேண்டும். கூட்டுறவு ஒரு சிறந்த வாழ்க்கைமுறை. சிறந்த கூட்டுறவில் பரஸ்பர நம்பிக்கை, நல்லெண்ணம், ஜனநாயகப் பாங்கு, கூடித் தொழில் செய்யும் தன்மை, பயனைப் பகிர்ந்து கொள்ளும் பாங்கு ஆகியன வளரும். இது இந்தியாவுக்குச் சிறந்த வாழ்க்கை முறையாகும். ஆதலால் இந்திய கிராமங்களை 21ஆம் நூற்றாண்டில் கூட்டுறவு நோக்கி அழைத்துச் செல்லவேண்டும்.

ஆனால் இந்தியாவில் கூட்டுறவு இயக்கம் நலம் சிறந்ததாக இல்லை. கூட்டுறவு இயக்கத்திலும் வல்லாண்மை அவ்வப்போது தலையெடுக்கிறது. அரசியல் ஆதிக்கக் குறுக்கீடுகள் உள்ளன. இவையெல்லாம் இல்லாமல் தன்னாட்சி அமைப்புடைய-தன்னைத் தானே சீரமைத்துக் கொள்கிற கூட்டுறவை அமைத்து ஒரு கிராமக் கூட்டுறவுக் குடியரசைக் காணவேண்டும். இது அண்ணல் காந்தியடிகள் கண்ட கனவாகும்.

மருத்துவம்

கிராமத்தில் அடிப்படைத் தேவைகளை நாம் 21ஆம் நூற்றாண்டுக்குள் செய்து முடித்தாக வேண்டும். கிராமங்கள்தோறும் இயற்கை மருத்துவ முறையினைக் கொண்ட மருத்துவ நிலையங்கள் கண்டாகவேண்டும். கடைகளில் விற்கும் கண்ட கண்ட போதை மருந்துகளை உட்கொண்டு மக்கள் உடலைக் கெடுத்துக் கொள்கின்றனர்.