பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கிராமங்களில் இயற்கை மருத்துவமனைகள் அமையவேண்டும். இது இந்திய நாட்டினுடைய பாரம்பரிய முறையாகும். இயற்கை மருத்துவம் நோயைக் கண்டறிந்து நீக்குவதோடு நோய்க்கான காரணத்தைக் கண்டு நீக்கும் ஆயுர்வேத-சித்த மருத்துவ மனைகள் உருவாக வேண்டும். ஒவ்வொரு ஊராட்சியிலும் இத்தகைய மருத்துவமனை ஒன்று இருக்கவேண்டும். நல்ல குடிநீர் கிடைக்கச் செய்யவேண்டும்.

ஆன்றோர் காலத்தைப்போல கிராமம் ஒரு குடும்பமாக விளங்கவேண்டும். “எல்லாரும் ஒருவருக்காகவும் ஒருவர் எல்லாருக்காகவும்” என்கிற சித்தாந்தம் கிராமத்தில் நிலவ வேண்டும். கிராமத்தில் கோயில்களை மையமாகக் கொண்ட ஒரு சமுதாய அமைப்பு, வளர்ச்சிக்குரிய வழிகளைக் காணும் சமுதாய அமைப்பு, தங்களைத் தாங்களே விமர்சனம் செய்துகொள்ளும் சமுதாய அமைப்பு, சுய ஆட்சித் தன்மையுடைய கிராம சமுதாய அமைப்பு உருவாக வேண்டும். கிராமங்களின் செல்வத்தை வெளியே கொண்டு செல்லும் வலிமை யாருக்கும் இருக்கக்கூடாது. கிராமத்துச் செல்வம் கிராமத்திற்கே கிடைக்கவேண்டும். இந்திய கிராமம் செழித்து வளர்ந்த நிலையில் தன்னுடைய கணிசமான பங்கை நாட்டுக்களிக்கும்; அளிக்கவேண்டும். கிராமத்துச் செல்வம் கிராமத்திற்கே கிடைக்கவேண்டும் என்பது கிராமத்தை நாட்டிலிருந்து தனியே பிரிப்பதன்று. நாம் குறிப்பிடுவது சுரண்டும் நிலை இருக்கக்கூடாது என்பதேயாகும். 21ஆம் நூற்றாண்டில் இந்திய கிராமங்கள் தன்னிறைவுடையதாக - கூட்டுக் குடும்பமாக, பழமையும் புதுமையும் இணைந்து நிலவும் பகுதியாக விளங்கவேண்டும்.

-மதுரை காமராசர் பல்கலைக்கழகம் 25-3-87-ல் நடத்திய
கருத்தரங்கில், தவத்திரு அடிகளார் அளித்த குறிப்புகள்.