பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

105


‘எஸென்ஸ்’ எடுத்து நறுமணப்பொருள்கள் தயார் செய்வது நல்ல இலாபகரமான தொழில்.

களர் நிலங்களில், குறிப்பாக உப்பு நிலங்களில் உப்புத் தண்ணீரையே குடித்து வளரும் தாவரங்களை வளர்க்கும் தொழில் நுட்பத்தையும், உப்பு அடிப்படையிலான தொழில் நுட்பத்தையும் பவ நகரில் உள்ள மத்திய உப்பு, கடல் தாவரங்கள் ஆய்வு நிறுவனம் (CSMCRI) வழங்குகின்றது. ஜோஜோபா என்றொரு தாவரம். இத்தாவரம் எண்ணெய் வித்து வகையைச் சார்ந்தது. ஜோஜாபாக்கிலிருந்து எடுக்கப் பெறும் எண்ணெய் தோல் அடிப்படையிலான தொழில்களுக்குப் பயன்படுகிறது. ஜோஜோபாக் செடி 150 ஆண்டுகள் வரை பலன் கொடுக்கும். நீண்ட கடற்கரையுடைய நமது நாட்டில் கடற்பாசி வளர்த்து அகர்அகர் செய்யலாம். இந்தோனேசியா முதலிய நாடுகளில் கடற்பாசியை உணவுப் பொருளாகப் பதப்படுத்திப் பயன்படுத்துகிறார்கள். நமது நாட்டில் கடற்பாசி வளர்க்க நிறைய வாய்ப்புக்கள் உள்ளன.

நமது நாட்டின் கிராமப்புறங்கள் செல்வக் களஞ்சியங்களாகும். கிராமப்புறங்களின் செல்வ ஆதாரங்களை முறையாகப் பயன்படுத்தினால் குறைந்த மூலதனத்தில் நிறைந்த பயனடையலாம். கிராமங்களிலிருந்து நகரங்களை நோக்கி நகரும் வாய்ப்பைக் குறைக்கலாம். கிராமப்புறச் செல்வ ஆதாரங்களை முறையாகப் பயன்படுத்தினாலே போதும். கிராமங்களும் வளரும்; நல்ல தொழில் நுட்பமும் வளரும்.

வளர்ந்து வரும் கிராமங்களில் இயந்திரவியல் தொழில்களுக்கும் நல்ல வாய்ப்பு இருக்கிறது. உழு கருவிகள், நீர் இறைவை எந்திரங்கள் பழுது பார்க்க வேண்டும். மேலும் மேலும் விவசாயத்திற்குப் பயன்படும் கருவிகளையும் செய்து முடிக்கவேண்டும். மேலும், இன்று மின்சாரம் இல்லாத கிராமங்களே இல்லை என்று கூறலாம். மின்சாரம் சார்பான சாதனங்களைப் பழுதுபார்த்தல் முதலிய பணிகளைச்