பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மேலாண்மையை, பராமரிப்பை தொடக்கக் கூட்டுறவு வங்கிகள் மேற்கொள்ள வேண்டும்.

இந்த யுகம், போட்டிகள் நிறைந்த யுகம். போட்டிகள் வளர்ச்சிக்குத் துணை செய்யும் என்கிற சித்தாந்தமே தோன்றிவிட்டது. இந்தப் போட்டி மனப்பான்மையை மேதை குமரப்பா அவர்கள் வரவேற்கவில்லை. மாறாகக் கூட்டுறவு முறையில் அது நடக்க வேண்டும் என்பது மேதை குமரப்பா அவர்களின் உயர் கருத்து; கொள்கை. கிராமத்தின் அனைத்துத் தொழிற்பாடுகளும் கூட்டுறவின் மூலமே நடைபெற வேண்டும் என்பது மேதை குமரப்பா அவர்களின் உறுதியான கொள்கை. “ஒரு வெள்ளிச் சரட்டில் பவழங்களைக் கோர்த்தது போல்” கிராமத்தின் அத்துணை மக்களையும், பணிகளையும் கூட்டுறவு இணைந்து சிறந்து விளங்கவேண்டும். ஒரு கூட்டுறவு நிறுவனத்தின் செயற்பாடு பற்றி அந்தக் கூட்டுறவு நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கையை வைத்து அறிதல் கூடாது. மற்று எப்படி? கிராமத்தின் அன்றாடத் தேவைகளான உணவுப் பொருட்களையும் மற்றும் துணி முதலிய தேவைகளையும் உற்பத்தி செய்து வழங்கும் தகுதி பெறுவது கொண்டுதான், கூட்டுறவு நிறுவனத்தின் பணியை மதிப்பீடு செய்யவேண்டும் என்பது மேதை குமரப்பாவின் கொள்கை. ஒரு கிராமத்துக்கு ஒரு பலநோக்குக் கூட்டுறவு சங்கம் என்பது மேதை குமரப்பாவின் கொள்கை. இந்த ஒரு பலநோக்குக் கூட்டுறவு சங்கமே கிராமத்தின் உற்பத்தி மற்றும் சந்தை முதலிய பொருளியல் நிர்வாகத்தை நடத்தவேண்டும். இந்த முறையில் கூட்டுப் பொறுப்பு அதிகமாகி, நல்லவண்ணம் இருக்கும். ஆனால் இன்றோ கூட்டுறவை... துறைவாரியாகப் பிரித்து எண்ணற்ற நிறுவனங்களாக ஆக்கியதால் நிர்வாகச் செலவும், சுமையும் கூடுதலாகி இருக்கிறது. இது, வரவேற்கத்தக்கதல்ல. கிராமப் பலநோக்குக் கூட்டுறவு சங்கமே அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ளலாம் என்பது சிறந்த கொள்கை