பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

109



கிராம அளவில் பலநோக்குக் கூட்டுறவு சங்கம் அமைக்கப் பெற்று, பல நோக்குக் கூட்டுறவு சங்கம் நன்முறையில் நடந்தால், உலக நாடுகளுக்கிடையேகூட பொறாமையுடன் கூடிய போட்டிகள் தவிர்க்கப்படும் என்பதும், இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் பொருளாதார விடுதலையும், அமைதியும் கிடைக்கும் என்பதும் மேதை குமரப்பா அவர்களின் திடமான நம்பிக்கை. நமது நாட்டு வங்கிகள், மேற்கத்திய நாட்டு வங்கிகளைப் போல, தொழிலாகச் செய்யக் கூடாது. மேற்கத்திய நாடுகளில் வங்கி நடைமுறை, ஊசியின் மூலம் உடம்பிலிருந்து இரத்தத்தை எடுக்கும் முறை போன்றது. பொருளாதாரச் சுரண்டல் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். உற்பத்தியாளர்களைச் சுரண்டுவதை நிகர்த்தது. இத்தகைய சுரண்டல் முறையால் உணவுப் பொருள்கள் மற்றும் நுகர்வுப் பொருள் உற்பத்தியாளர்கள் பல ஆயிரக்கணக்கில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உற்பத்தி செய்யப்பெறும் உணவுப் பொருள்கள் காலகதியில் கெட்டுப்போகும் அல்லது அழிந்துபோகும் இயல்பின. ஆதலால், உற்பத்தி செய்த பொருள்களை அறுவடை செய்த கையோடு கையாக விற்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தமான பரிதாப நிலைமைக்கு விவசாயிகள் ஆளாகின்றனர். பலநோக்குக் கூட்டுறவு சங்கம் உற்பத்திப் பொருள்களில் கிராமத்தேவை போக மீதியைச் சந்தைக்கு எடுத்துச் சென்று விற்றுத்தர வேண்டும்.

கிராமப் பொருளாதாரத்திற்கும், மேம்பாட்டுக்கும் திட்டமிடும்பொழுது முதலில் சுகாதாரத்திற்குத் திட்ட மிடுவது நல்லது. உண்ணாமல் ஒருபொழுது இருக்கமுடியும். ஆனால் மலம், சிறுநீர் கழிக்காமல் இருத்தல் இயலாது. அது போலவே கால்நடைக் கழிவு, வீடுகளில் சேரும் குப்பைகள். இவற்றை உடனுக்குடன் அப்புறப்படுத்தி தொழு உரமாக ஆக்குதல் அவசியம். இதனால் கிராமமும், சுற்றுப்புறச் சூழலும் தூய்மையாக அமைகிறது. நோய் தடுக்கப்படுகிறது.