பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தீட்டு என்கிற மனோபாவம் இருந்தது. இவ்வளவுக்கும் விடிவு காண விரும்பினார் காந்தியடிகள். மனித குலத்தை ஒருகுலமாக்க வேண்டுமென்று அவர் விரும்பினார். காந்தீய தத்துவம் சமரச தத்துவம். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வழிவழி வந்த தத்துவம் திருவள்ளுவரும், அப்பரடிகளும், இராமலிங்கரும் போற்றிப் பாராட்டி வந்த தத்துவங்களை நடை முறைக்குக் கொண்டுவர முயற்சித்தார். உணவிலும், உடையிலும், போக்குவரத்திலும் மாற்றம் வந்திருக்கிறது-மனிதனுடைய மனத்திலே மட்டும் மாற்றம் வரவில்லை. அணைத்து வாழு என்று ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூறியிருக்கிறார்களே, அந்தப் பண்பு இன்று வரை வளர்ந்திருக்கிறதா? மாறாக எப்படி அடித்தால் அவனுக்கு நன்றாக வலிக்கும்? எப்படி அடித்தால் அவனை வீழ்த்தலாம் என்று ஆராய்கின்ற பண்பு வளர்ந்திருக்கிறது.

இன்று நம்மை நாமே ஆத்ம சோதனை நடத்திக் கொள்ளும் நிலைக்கு நாம் வந்திருக்கிறோம். இந்த நாட்டின் சமுதாய வரலாற்றில் காந்தியடிகளின் சித்தாந்தம் முழுக்க முழுக்கப் பொருந்தும். அதுதான் சர்வோதயம். எப்படி உதயம் இயல்பாகவே ஏற்படுகிறதோ அதுபோல சமுதாயத்தில் எல்லோரும் வாழுகின்ற ஒரு நல்ல அமைப்பு முறை இயல்பாகவே-தானாகவே உருவாகவேண்டும். அப்படித் தன்னியல்பாக வளர்வதுதான் சர்வோதயம்.

‘எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே’ என்ற தாயுமானாரின் சித்தாந்தம். சர்வோதயத்தின் முழுச் சித்தாந்தம் என்று கூறலாம்.

‘தனியொருவனுக்கு உணவிலையெனில் சகத்தினை யழித்திடுவோம்’ என்று பாரதியார் பாடினார். அந்தத் தனியொருவன் யாராக இருக்கமுடியும்? உரிமைகளைக் கேட்க வாயற்று, தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வழியும்