பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

115


வலிமையும் அற்று மூலையிலே ஒதுக்கப்பட்டுக் கிடக்கின்ற ஒருவனைப் பற்றித்தான் பாரதியார் பேசுகிறார். அத்தகைய ஒருவனை நோக்கிச் சோறும் துணியும் போகும்படி செய்வதுதான் சர்வோதயம்.

95 பேரின் வாழ்க்கை உரிமைகளையும் அவர்களிடத்து உரமும் உறுதியும் இல்லையென்ற காரணத்தால் எஞ்சியுள்ள 5 பேர் பறித்துச் சுகவாழ்வு வாழுகிறார்களே! இந்நிலை இருக்கலாமா?

மனித சமுதாயத்தில் எந்த ஒரு கோடியில் வறுமை இருந்தாலும் அது நம்மை அரித்துத் தின்றுவிடும் என்பதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். நாம் எதற்கும் கும்பிடு போட மிக நன்றாகக் கற்றுக் கொண்டிருக்கிறோம். ஆனால் எதைக் கும்பிடுகிறோமோ அதனுடைய தத்துவத்தை மட்டும் வாழ்க்கையில் காப்பாற்ற மாட்டோம். புறக் காட்சிகளையும் புறத் தத்துவங்களையும் பார்த்து அவற்றை நம்முடைய வாழ்க்கையில் மேற்கொள்ள வேண்டும்.

காந்தியடிகளின் நினைவாக நாம் சத்தியம் செய்து, உறுதி எடுத்துக் கொள்ளவேண்டும். அவர் வலியுறுத்திவந்த தத்துவங்களை-சித்தாந்தங்களை நாம் கொஞ்சம் கொஞ்சமாகவாவது வாழ்க்கையில் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி பெறவேண்டும்.

சமயவாதி என்றால் நல்ல மணமுள்ள மலர்போல இருக்கவேண்டும். மலரின் மணத்தினாலாய இன்ப அனுபவம் மனிதர்களுக்கே யாம் - மலர்களுக்கல்ல. மலர் இருக்கும் செடி அனுபவிப்பது பலருக்கு அருவருப்பூட்டும் உரத்தைத்தான். ரோஜா மலர் வண்ணத்தால் மணத்தால் பலருக்கு விருந்தளிக்கிறது; அதுபோலவே மனிதனும் காட்சியாலும் செயலாலும் மற்றவர்களுக்கு இன்பம் அளிக்க வேண்டும். அது மனிதனின் கடமை. இதனை நமக்கு உணர்த்துவதுதான் சர்வோதயம்.