பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கொடியே கொம்பில் படர முடியும். அதுபோல, உலகியல் அனுபவத்திற்குரியன இல்லாமையை வழியின்பாற்படுத்தி வாழாக்கிடக்கச் செய்தலோ அல்லது கிடைக்காமையின் காரணமாக அவை நிலையற்றன-பயனற்றன என்று கூறுதலோ வாழ்க்கையின் முழுநிறை வளர்ச்சிக்குத் துணை நிற்கமாட்டா. அதனால் திருவள்ளுவர் வாழ்க்கையை ஒத்துக் கொள்ளுகின்றார். பொருள் செய்தல்வேண்டும் என்று வற்புறுத்துகின்றார்; வாழ்வாங்கு வாழவேண்டும் என்று வற்புறுத்துகின்றார்; வாழ்வாங்கு வாழ வழியும் காட்டுகின்றார். ஆதலால் தனிமனித வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கும் நாகரிகத்திற்கும் பண்பாட்டிற்கும் காரணமாக இருக்கின்ற காலத்தைப் பயன்படுத்திக் கடமைகளைச் செய்தலைத் திருவள்ளுவர் வற்புறுத்துவது மிகவும் முற்போக்கான கருத்து.

ஊக்கமுடைமை

மனித உயிருக்கு இயல்பிலேயே அறிவறியும் ஆற்றல் உண்டு. கிளர்ந்து எழுகின்ற இயல்பும் உண்டு. உயிரின் இந்தக் கிளர்ந்தெழும் ஆற்றல் நல்வழிப்படுத்தப்பெறும்பொழுது சிறந்த பயனைத் தருகின்றது. உயிர் கிளர்ந்தெழுந்து செயல் செய்யும் உணர்வுக்கு ஊக்கமுடைமை என்பது பெயர். ஒப்பற்ற சமநிலைச் சமுதாயத்தை அமைக்க மனிதன் விரும்புவானாயின் அவனுக்கு முதலில் தேவை ஊக்கமுடைமை. ஊக்கமுடையவர்கள் முற்பிறப்பு, அவ்வழிவரும் பலாபலன்களை நம்பமாட்டார்கள். அப்படியே ஒருகால் நம்பினாலும் தம்முடைய முயற்சியால் அதை மாற்றியமைக்க முடியும் என்ற உறுதிப்பாடு தோன்றும். திருவள்ளுவர், ‘கூற்றம் குதித்தலும் கைகூடும்’ என்று கூறுகின்றார். ஆதலால் மனிதனுடைய ஊக்கம், அவ்வழி, சமுதாயத்திற்கு இன்றியமையாத ஒன்று. கைப்பொருள் அழியலாம். ஆனால், உள்ளக் கிளர்ச்சியும், ஊக்கமும் அழியமாட்டா. சமநிலைச் சமுதாய அமைப்பைத் தோற்றுவிக்கும் முயற்சியின் முதற்படி