பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

123


மக்களைச் செல்வ முடையோராக்குதல் அல்ல-உழைப்பதற்கு அறிவையும், ஆற்றலையும் தருவதேயாகும். அதனாலன்றோ திருவள்ளுவர்,

‘உடையார் எனப்படுவது ஊக்கம் அஃதிலார்
உடையது உடையரோ மற்று’

–குறள் 591

என்கிறார். இன்றைய உலகியலிற்போல நிலவுடைமை-பொருளுடைமை முதலியவற்றை முதன்மைப்படுத்தாமல் அவற்றைப் படைக்கக்கூடிய ஆற்றலையே, அல்லது ஊக்கத்தினையே உடைமை என்று திருவள்ளுவர் குறிப்பிடுவது மிகவும் திருந்திய கருத்து. அதுமட்டுமா? உள்ளக் கிளர்ச்சியும் ஊக்கமும் இல்லாதார்மாட்டுச் சமுதாய அமைப்பில் உள்ள சீர்கேடுகளின் வழியாகக் குருட்டாம்போக்காகச் செல்வம் கிடைத்துவிட்டாலும் அப் பொருளுடைமை நில்லாது நீங்கிவிடும் என்பதும் திருவள்ளுவர் கருத்து.

பொதுவாக, பொருளைத் தேடிச் செல்வோர் பலருண்டு. பொருளைத் தேடிச் செல்வோர் பெருகியுள்ள சமுதாயம் வளர்ச்சியடைந்த ஒரு சமுதாயம் அல்ல. பொருள் மனிதனுடைய ஆற்றல்மிக்க படைப்பினால் படைக்கப் பெறும் ஒன்று. தான் படைத்து அனுபவிக்கக் கூடிய ஒன்றினைத் தேடிச் செல்வது அறிவுடைமையாகாது. பொருள் மனிதனை நோக்கி வரவேண்டும். அது எப்போது நிகழும்? நடுக்கமற்ற நம்பிக்கையுணர்வோடு எவனொருவன் உழைக்கின்றானோ அவனை நோக்கிச் செல்வம் வழிகேட்டுக் கொண்டு வலிய வந்து குடிபுகும்.

‘ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையா னுழை’

–குறள் 594

என்கின்றார் திருவள்ளுவர். ஊக்கத்திற்கு அசைவிலா ஊக்கம் என்று அடைமொழி கொடுத்துப் பேசுகின்றார். பலருக்குத் தொடக்க நிலையில்... முதல் தடவையில்