பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



22. [1]சமவுடைமைத் தத்துவம்

மூகத்திலிருந்து, தனிமனிதனா? தனி மனிதனிலிருந்து சமூகமா? என்பது ஒரு கேள்வி, இந்தக் கேள்விக்கு விதை முந்தியதா? மரம் முந்தியதா? என்று வினவி விடை காண்பது போலத்தான் விடைகாணவேண்டும். ஆனால், தனி மனிதனே சமூகம் என்பதற்கு தெளிவான விடை கிடைக்கிறது. உருவ அமைப்பில் பல தனி மனிதர்களின் கூட்டே சமூக அமைப்பு.

உணர்வு அடிப்படையில் சமூகத்திலே இருந்துதான் தனி மனிதன் தோற்றுவிக்கப்படுகிறான். ஒவ்வொரு தனி மனிதனும் பரந்துபட்ட சமுதாயத்திலிருந்தே அறிவை-உணர்வை சீலத்தைப் பெறுகின்றான். சமுதாயத்தினுடைய நடைமுறைகளுக்கு ஏற்றவாறுதான் தனி மனிதன் உருவாக்கப்படுகின்றான் என்பது மார்க்சீய தத்துவங்களுள் ஒன்று. இதையே திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஐயத்திற்குச் சிறிதும் இடமின்றி,

“மனத்துளது போலக் காட்டி ஒருவற்கு
இனத்துளது ஆகும் அறிவு”

–குறள் 454

என்று தெளிவாகக் கூறியுள்ளார்.

ஆம்! மனிதனின் அறிவு அவன் மனத்தில் இருப்பதாக ஒரு கற்பனை! அங்ஙனம் இல்லை. தன்னைச் சுற்றியிருக்கும் உலகத்தோடு தொடர்புகொள்ளும் பொழுது அறிவைப் பெறுகின்றான். சமூகம் எதை மதிக்கிறதோ அதை அவன் மதிப்பான். அதைச் சரியா? தவறா? என்று கருதிகட்டப் பெரும்பாலும் ஆசைப்படமாட்டான். ஒருசிலர் ஆராய்வர். அவர்கள் சமூகத்தால் வெறுக்கப்படுவர். அவன் கற்கும் நூல்களோ அவன் காலத்துச் சமுதாயத்தின் கருத்துக்களையே


  1. மனம் ஒரு மாளிகை