பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


காரணத்தை மாற்ற முயற்சி செய்யாமல் நோய்க்கு மருந்து கொடுக்கின்றனர். சிலர் மருத்துவம் என்ற பெயரில் நோயை வளர்க்க முற்படுகின்றனர். இவை ஏற்கத் தக்கன அல்ல. முற்றாக வெறுக்கத்தக்க செயல்முறைகள்.

இலங்கை ஒரு நாடு; ஒரு சிறிய தீவு. ஆனால் வளமான தீவு. இலங்கையில் வாழும் மக்கள் வளமுடன் வாழ்ந்திட, அங்குள்ள இயற்கைச் செல்வம் போதும். ஆனால், தனி உரிமைச் சமுதாய அமைப்பு, சுரண்டலுக்கு இடமளிக்கிறது. இந்த உலகத்தில் உள்ள இயற்கைச் செல்வத்தைக் கொண்டு, அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழமுடியும். ஆனால், ஒருவருடைய பேராசைக்குக் கூடப் போதாது என்றபடி, இலங்கையின் பொருளாதார நியதி ஆகிவிட்டது. பற்றாக் குறை உருவாக்கப்பட்டுவிட்டது; போட்டிகள் தோன்றி விட்டன; உடையாரும் இல்லாரும் தோன்றிவிட்டனர்; உத்தரவாதமுள்ள சமுதாயம் இன்று இல்லை; ஒருவர் எல்லாருக்காகவும், எல்லாரும் ஒருவருக்காகவும் என்ற பொதுவாழ்வியல் அறம் புறக்கணிக்கப் பெற்றது; இலங்கையில் பிரச்சனை தோன்றிவிட்டது.

இலங்கையில் ஈழம் ஒரு பகுதி. ஈழத்தில் வாழ்கிறவர்கள் தமிழர்கள் ஈழத்தமிழர்கள் புத்திசாலிகள் நல்ல நிர்வாகிகள். இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சி நடந்தபோது ஈழத்தமிழர்களே பெரும்பாலும் ஆட்சியில் அமர்ந்திருந்தனர். ஆட்சியை இயக்கினர். அப்போது சிங்களவர்கள், பின்தங்கிய நிலையில் இருந்தனர். சிங்களவர்களில் கிறிஸ்தவரானவர்கள் மட்டும் ஓரளவு முன்னேற்றம் அடைந்தனர். ஆக, இடைவெளிகள் வளர்ந்துவந்தன. இந்த இடைவெளிகளை அகற்றுவதில் மொழிகளும் சமயங்களும் முக்கிய பாத்திரத்தை வகித்தன என்பது மறுக்கமுடியாத உண்மை. ஆயினும் மொழி -சமய உணர்வாளர்களை இயக்கிப் பயன் கொண்டது