பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

133


பொருளாதார அமைப்பேயாகும். இன்றும் இலங்கைப் பிரச்சனையில் பிரதான பாத்திரமாக விளங்குவது, மொழியும் சமயமும் ஓரளவு பாத்திரமேற்றுள்ளன. ஆயினும் பொருளாதாரக் காரணங்களே மிகுதி.

இலங்கைப் பிரச்சினை தீர, இலங்கையில் வாழும் அனைவருக்கும் உத்தரவாதமளிக்கும் ஒரு சமுதாய அமைப்பை காலம் கடத்தாமல் பெறத்தக்க வகையில் ஆட்சி முறை அமையவேண்டும். அடிப்படைத் தேவைகளுக்குக்கூட உத்தரவாதம் தர, இயலாத சமுதாய அமைப்பால் என்ன பயன்? அது இருந்தால் என்ன? இல்லாமல் போனால் என்ன?

அடுத்து ஒரு காரணம். இருபதாம் நூற்றாண்டில் ஒரு நோய் பரவி வருகிறது. இளங்கோவடிகள் ஆட்சிக்கட்டில் இன்பம் தருவது என்று செங்குட்டுவன் வாயிலாக விளக்குகின்றார். ஆனால் இன்றோ, ஆட்சி அதிகாரம் செலுத்தும் கருவியாக, அடுக்கிய கோடி செல்வம் சம்பாதித்துக் கொள்ளத்தக்க கருவியாக அமைந்துவிட்டது. அதனால் தகுதியிலாதார்கூட ‘ரெளடிச’த்தின் மூலம் ஆட்சியினைப் பிடிக்க முயலுகின்றனர். இதன் தாக்கங்களும் பலநாடுகளில் பாதித்துள்ளன.

மூன்றாவதாக உலக வல்லரசுகளின் சந்தை பிடிக்கும் ஆசை. நீங்கிய பாடில்லை. ஆதலால் வளர்முக நாடுகளில் பின்தங்கிய நாடுகளில் சமூக மோதல்களை-கலகங்களை உருவாக்கி அந்த நாடுகளின் உற்பத்தியைப் பாதிக்கச் செய்து தங்கள் பொருள்களை விற்கின்றன. இதனாலும் வளர்முக நாடுகளில் பிரச்சனைகள் உருவாகின்றன; வளர்கின்றன.

இத்தகு சமூகத் தீமைகளைக் கண்டு மக்கட் சமுதாயம் கொதித்து எழுதலும், நல்லதோர் சமுதாய அமைப்பை பெறுதலுமே தீர்வுக்குரிய ஒரேவழி.

கு.xiii.10.