பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1

இருந்த பல்லக்கு சவாரியையும் அடிகளார் தவிர்த்துவிட்டார். அடிகளாரின் பயணம் கார்ப் பயணம். ஞானியாரடிகளுக்கு அவர் காலத்திலேயே ஒரு கூட்டம் இருந்தது. மாணவர் கூட்டம் இருந்தது. ஆங்காங்கே அன்பர் கூட்டம் இருந்தது. குன்றக்குடி அடிகளாருக்கு நாடுதழுவிய ஒரு பெருங்கூட்டம் இருந்தது. ஞானியாரடிகளின் சொற்பொழிவுகளுக்கும், குன்றக்குடி அடிகளாருடைய பேச்சுக்கும் கூட்டங்கூடியதுபோல் வேறு எந்த மடாதிபதிக்கும் கூட்டம் கூடியதில்லை. இருவரது பேச்சும் எழுத்துவடிவம், நூல் வடிவம் பெற்றுள்ளன.

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசையில் இது பதிமூன்றாம் தொகுதி. நாடு, மொழி, சமுதாயம், பல்துறைக் கட்டுரைகள் என நான்கு பகுதிகளாக இத்தொகுதி அமைந்துள்ளது. அடிகளார் தொடாத துறை இல்லை. நாடு என்ற தலைப்பில் பஞ்சாயத்து ராஜ் பற்றி எழுதுகிறார். கூட்டுறவைப் பற்றி எழுதுகிறார். தொழிலாளர் பற்றி எழுதுகிறார். சர்வோதயம் சோஷலிசம் சமவுடைமைத் தத்துவம் கிராமப்புற வளர்ச்சி ஆகியவற்றைப் பற்றிப் பேசுகிறார். இவற்றைப் பற்றியெல்லாம் பேசிய மடாதிபதி, எழுதிய மடாதிபதி அடிகளார் ஒருவர்தான். மடாதிபதிகள் பலருக்கு இவற்றைப் பற்றியெல்லாம் தெரியாது.

அடிகளார் சைவத் துறவி, தமிழ்த்துறவி. நேருவின் சோஷலிசமும் வினோபாவின் சர்வோதயமும் அடிகளாருக்குப் பிடித்தமானவை. காந்தியத்தையும் மார்க்சீயத்தையும் இணைத்துக் கண்டவர் திரு.வி.க. என்றால் சைவசித்தாந்தத்தையும் மார்க்சீயத் தையும் இணைத்துக் கண்டவர் அடிகளார். சைவம்,தமிழ், சோஷலிசம், சர்வோதயம், மார்க்சீயம் ஆகிய ஐந்தின் கலவை அடிகளார்.

சட்டமேலவை உறுப்பினராகவும் கிராமப்பஞ்சாயத்துத் தலைவராகவும் இருந்த ஒரே மடாதிபதி அடிகளார். இப்பதவிகளில் அவர் ஆற்றிய பணிகள் போற்றப்பெற வேண்டியவை. பஞ்சாயத்தைப் பற்றியும் கூட்டுறவைப் பற்றியும் அடிகளார் இந்நூல் 35ஆம் பக்கத்தில் பின்வருமாறு எழுதுகிறார். "சுதந்திர பாரத சமுதாயக் குடும்பத்தின் இலட்சியம் சோஷலிச சமுதாய அமைப்பு. அந்த இலட்சியத்தை அடைய நம்முடைய இரண்டு நேர்ப் பாட்டைகள் கிராம ராஜ்யமாகிய பஞ்சாயத்தும் கூட்டுறவுமாகும். பிரிந்து கிடக்கும் மனித சக்திகளைக் கூட்டுறவு இயக்கத்தின்மூலம் ஒன்றுபடுத்த முடியும். கூட்டுறவால்