பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மாறுபடுகிறவர்களிடம் நாம் பழகும்போது அசோகரின் புத்திமதியைப் பின்பற்றுவது நலம்; அசோகரின் மனத்திலே பிரசாரப் போருக்கு இடம் இல்லை. இன்றும் “பிரசாரப்போர் ஏதும் நிகழத் தேவையில்லை” என்று எடுத்துக் கூறியுள்ளது (‘இந்தியா இன்றும் நாளையும்’ பக்.62) நினைவு கூரத்தக்கது. ஆதலால் இந்தியாவை-பாரதத்தை வளமை பெற்ற ஒரு நாடாக காணவைத்துக் கொள்ள இங்குக் கூடியுள்ள இளைஞர்கள் முன் வரவேண்டும். இந்தியாவின் வலிமையையும் வளத்தையும் ஆன்மிகச் செறிவையும் இந்தியாவின் ஒருமைப்பாட்டினைக் கட்டி காப்பாற்றுவதன் மூலமே வளர்க்க முடியும்; பாதுகாக்க முடியும். ஆதலால் நாம் அனைவரும் எந்த விலை கொடுத்தும் இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற முன்வரவேண்டும். ‘உரமான நோக்கமும் உயர்வான உள்ளமும் கொண்டு இந்தப் புண்ணிய யாத்திரையை நாம் தொடங்கிவிட்டோம். இது எவ்வளவு நீண்டு போனாலும் இறுதியிலே நாம் இலக்கை அடைவோம்’ எனும் அண்ணல் நேருவின் அமுத வாக்கை நாம் அனைவரும் நினைவிற்கொள்ள வேண்டும்.

இந்தியா ஒரு பெரிய நாடு. பல மொழிகள் பேசும் மக்கள் வாழும் நாடு; பல மதத்தினர் வாழும் நாடு; பல்வேறு வகையான மரபுகள், பழக்கங்கள், வழக்கங்கள் உடைய நாடு. இந்த வேறுபாடுகளே இந்தியாவில் நிலவும் சுதந்திரத்திற்கு எடுத்துக்காட்டு. இந்த வேறுபாடுகளுக்கு இடையில் இந்தியர் ஒருமை நிலையில் விளங்கி வந்திருப்பது பாரதத்திற்கே உரிய தனிப் பண்பு. இந்தியா, அரசியல் ரீதியாக வேறுபட்டிருந்த காலத்தில்கூட பண்பாட்டில் கலாச்சாரத்தில் ஒன்றாகவே இருந்தது என்பதை நாம் அறிந்தாகவேண்டும். இமயம் முதல் குமரி வரை-இராமேசுவரம் வரை ஒருவிதப் பண்பாட்டியல், பழக்க இயல் இந்தியாவைப் பல ஆயிரக்கணக்கான ஆண்டு களாக இணைத்து வைத்திருக்கிறது என்பது பெருமைப்படுவதற்குரிய செய்தி. இராம காதை பாரதக் காதை ஆகியன