பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஒழுகவேண்டும். இதுவே இந்தியாவிற்கு நல்லது. தீவிரச் சமய வெறிகளை எதிர்க்கும் துணிவை இளைஞர்கள் ஏற்க வேண்டும்.

அடுத்து, நம்முடைய நாட்டில் பேசப்பெறும் மொழிகள் பலப்பல. ஒவ்வொருவருக்கும் தாய்மொழி வழிக் கல்வியும் தாய்மொழியில் தேர்ந்த புலமையும் அறிவும் தேவை. அதேபோழ்து இந்திய மொழிகள் பலவற்றை ஏற்பது நல்லது. தாய்மொழியில் தேர்ந்த அறிவு பெறுவதுதான் அறிஞர்கள் உருவாக வழி. பல்வேறு மொழிகளைக் கற்றுத் தேர்ந்தால்தான் அறிவு வளரும்; மனம் விரிவடையும்; பரந்த நோக்கம்வரும். மொழி, ஒருவர் கருத்தை மற்றவர்களுக்கு அறிவிக்கவும் மற்றவர்கள் அறியவும் பயன்படும் ஒரு கருவி (Tool). மொழிகள் மாறுபட்டாலும் கருத்து மாறுபடப் போவதில்லை. தேசியகவி பாரதி,

“செப்பும் மொழிபதி னெட்டுடையாள்-எனில்
சிந்தனை ஒன்றுடையாள்”

என்று பாடியது நினைவு கூரத்தக்கது. இந்தியர் அனைவருக்கும் சிந்தனை ஒன்றுதான் என்பதை மறவற்க மொழிகளிடையே உள்ள அறிவுஜீவ ஊற்றுக்களில் இளைஞர்கள் குளித்து அனுபவிக்க வேண்டும். மொழிகளின் அடிப்படையில் பிரிவினை உணர்வு உருவாவது விரும்பத்தக்கதன்று. இது மொழிகளின் நோக்கத்திற்கே மாறுபாடு ஆனது. இந்தியாவில் எந்த ஒரு மொழியும் தனித்திருக்காது. ஆதிக்கம் செலுத்தாது என்பதை நினைவிற்கொள்ளவேண்டும். இந்திய ஒருமைப்பாட்டிற்கு உதவி செய்யத்தக்க வகையில் பல மொழிகளைக் கற்கவும், தாய்மொழிச் சிந்தனையில் அறிவியல் காலூன்றி நிற்கவும் இளைஞர்கள் தங்களைப் பயிற்றுவித்துக் கொள்ள வேண்டும்; வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பலர் ஒன்றுகூடி இணக்கத்துடன் நட்புறவுடன் வாழ்வதே ஒப்பற்ற சமுதாயம் கூடிவாழும் பண்பாட்டுக்குத்