பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

149



சமயச் சால்பு என்பது தன்னலமறுப்பு. அஃதாவது பிறர்நலம் பேணுதல், சமயவாழ்க்கை என்பது செழித்த அன்பினால் ஆயது; அறத்தினால் ஆயது. சமய வாழ்க்கையின் அச்சு சம நோக்கு; குளுமையான சமநோக்கு. அஃதாவது தன்னைப்போல் பிறரை மதித்தலாகும். சமய நெறிகளின் வாயில்களாகவே இறையுணர்வு கிட்டுகிறது. வேண்டுதலும்- வேண்டாமையும் அவ்வழிப்பட்ட பகையும் சமயநெறிகளுக்கு ஏற்புடையனவல்ல. மனித உலகத்தை வாழ்விக்கும் ஆற்றல், கடவுளின் அருள் பெற்ற ஞானிகளுக்கு-தூதர்களுக்கு-அடியார்களுக்கு உண்டு. இவர்கள் வழியில் மனித உலகத்தை வழி நடத்த திருவருள் பேரவையைக் காண்க. திருவருள் பேரவையில் அனைவரும் ஒன்றுபடுவோம்! வையகத்தை வாழ்விப்போம்!

இந்திய நாடு ஒரு பெரிய நாடு. பலமொழிகள் பேசுநர் வாழும் நாடு; பல சமய நெறியாளர் வாழும் நாடு. வேற்றுமையில் ஒற்றுமை காணும் விழுமிய நாகரிகத்துக்கு இந்திய நாகரிகம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்த ஒப்பற்ற ஒருமைப்பாட்டினைக் கட்டிக் காப்பாற்ற திருவருள் பேரவை அமைத்துப் பணி செய்வோம். நமது நாட்டில் அண்மைக் காலமாகச் சில தீயசக்திகள் இனத்தின் பெயராலும் மதத்தின் பெயராலும் வெறுப்பினை வளர்த்துக் கலகம் செய்து வருகின்றன. இத்தீய சக்திகளைத் தொடக்கக் காலத்திலேயே களைதல் வேண்டும். மனித நாகரிகத்தை விரும்புபவர்கள் சமநோக்கின்மையை விரும்பமாட்டார்கள். இந்த வெறுப்புக் கொள்கையை அகற்றுவது இந்திய மக்களுக்கும் இந்திய நாட்டிற்கும் அகில உலகிற்குமே செய்யும் சிறந்த தொண்டாகும். இத்தீய சக்திகள் சாதிமுறை அமைப்புகளையும் காப்பாற்றப் போராடுகின்றன. மனித குலத்திற்குள் உள்மோதல்களை உண்டாக்கி பாரத சமுதாயத்தை நலிவுறச் செய்கின்றன. இவை மட்டுமா? “எல்லாருக்கும் எல்லாம்” என்கிற சமநிலைச் சமுதாய அமைப்புக்கும் தடையாக

கு.xiii.11.