பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பயந்து விடுவதில்லை. அவர்களின் சமயச்சார்புடைய வாழ்வு அவர்களை அல்லலுக்குள் ஆழ்த்துவதுமில்லை என்பதை அப்பர் திருவாக்கால் நாமறிகிறோம். சுதந்திர உணர்ச்சிக்கு வித்துன்றிய முதல் வித்தகரே. அப்பரடிகள்தான், அவரை அடியொற்றித்தான் ஏனைய கவிஞர்கள் சுதந்திர உணர்ச்சிக்குக் கவிதையால் உதவினார்கள். நமது தலைமுறையிற்றோன்றிய பாரதிகூட அப்பரது அடிச்சுவட்டைப் பின்பற்றியமை பாராட்டி மகிழத்தக்கது.

“பூமியில் எவர்க்குமினி யடிமைசெய்யோம்; பரிபூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்” என்று பாடியமை பாரதியின் புலமை வெளிப்பாட்டைக் காட்டுவதோடு அப்பரடிகளின் அருட்பாடலையும் நினைவூட்டி நிற்கிறது.

ஓரினமாக ஒன்றி வாழ்ந்த வாழ்வில் எப்படியோ சாதி முறை நுழைந்துவிட்டது. இச் சாதிய நுழைவு சிலர் வாழவும், பலர் விழவும்-சிலர் பெருக்கவும், பலர் வாடவும்-சிலர் சிரிக்கவும், பலர் அழவும் உதவி செய்தது. தெளிவாகச் சொன்னால் சிலருடைய வளமான வாழ்வுக்குச் சாதி உறுதுணையாய்-ஊன்றுகோலாய் உதவியது. பிரித்து வைத்து இன்பம் கண்டவர்களும்-தள்ளிவைத்துச் சுகம் அனுபவித்தவர்களும் சாதீய நெருப்புக்கு நெய் வார்த்தவர்கள். இந்தச் சாதீய நெருப்பானது சமயத்தின் தலையாய தத்துவங்களையும் மாசுபடுத்திவிட்டது. நமது சைவ சமயத்தின் கொள்கைகளும், கோட்பாடுகளும் இச்சாதீய நெருப்பால் தகிக்கப்பட்டுவிட்டன. ஆண்டவனின் குழந்தைகள் ஆண்டவனின் விருப்பத்திற்கு விரோதமாகத் தள்ளியும், விலக்கியும் வைக்கப்பட்டார்கள். இதனால் நமது சமயத்திற்குத் தளர்ச்சியும், வீழ்ச்சியும் வரலாயின. இவற்றை யெல்லாம் நல்லபடி சீராக்கி உயர்ந்ததொரு தொண்டினை உருவாக்குதல் சைவ உலகத்தினர் கடன் எனக்காட்டி-வாழ்த்தி-அறிவுறுத்த விரும்புகிறேன்.