பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அமைப்பாக மாறி மக்கட் சமுதாய வாழ்க்கையையே ஆக்கிரமிப்புச் செய்துகொண்டது. செய்து கொண்டிருக்கிறது. இன்று, எங்கும் எதிலும் அரசின் ஆதிக்கம் விழுது இறங்கி உள்ளது; இறங்கி வருகிறது.

தமிழகம் பல அரசுகளைக் கண்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக அரசியல் சிறந்திருந்த வரலாற்றுப் பெருமை தமிழ்நாட்டுக்கு உண்டு! உலகின் மற்ற பாகங்களில் அரசை எதிர்த்து மக்கள் கிளர்ச்சி செய்ததுபோலத் தமிழ் நாட்டில் செய்ததில்லை! அரசர்களைக் கொன்றதில்லை! ஏன்? தமிழக அரசுகள் மக்கள் விரோத அரசுகளாக இல்லாமல் மக்கள் நலம் நாடும் அரசுகளாகவே இருந்து வந்துள்ள, அதனால் அரசியற் கிளர்ச்சிகள் இல்லை; புரட்சிகள் இல்லை!

தம்மை அடைக்கலாம் புகுந்த புறா ஒன்றைப் பாதுகாக்க சிபி சக்கரவர்த்தி தனது சதையையே அறுத்துத் தந்த பெருமையை வரலாறு கூறுகிறது. சாதாரணப் புறா! இந்தப் புறாவிற்காகத் தன் உடற் சதையையே அறுத்து அறுத்துக் கொடுத்த பெருமை உண்டு! இன்றோ மனித உயிருக்கு விலை பணம் தான்! மனிதன் உயிரின் மதிப்பு ரூ. 5000/-தான். இன்று அடைக்கலம் பொருளற்றதாகப் போய்விட்டது. காவல் நிலயங்களிலேகூட அடைக்கலம் பாதுகாப்பைத் தரவில்லை. உயிர்க் குலத்துக்கு ஊறு அரசால் வரக்கூடாது; அரசினுடைய சுற்றத்தால் வரக்கூடாது. அரசின் பரிவாரங்களால் வரக்கூடாது. ஏன்? பகைவரால் கூட வராமல் அரசு பாதுகாக்கவேண்டும். இங்ஙனம் புகழ்பூத்து விளங்கிய அரசுகள் நினைவுக்கு வருகின்றன.

பாண்டியநாட்டு மதுரையில் ஒரு வணிகன் இருந்தான். அந்த வணிகன் பொருள் செயலுக்காக அயலூர் செல்கிறான்; மனைவியிடம் விடைபெறுகிறான். மனைவி தன் பாதுகாப்புக் குறித்துத் தனக்குள்ள கவலையைப் புலப்படுத்துகிறாள்.