பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

161


நடுங்கி ‘அடி வண்ணான்’ என்றார். மன்னர் சேரமான் பெருமான் "கவலற்க! திருநீற்றின் வாரவேடம் நினைப்பித்தீர்! வருந்தாதீர்!" என்றார். இன்று மனிதன் மதிக்கப்படுகிறானா? திருநீற்று வேடம் மதிக்கப்படுகிறதா? இவையெல்லாம் நினைவிற்குரியன. நினைத்துப்பாருங்கள்.

தமிழ்நாடு இயற்கை வளம் கொழிக்கும் நாடு. பாரியாண்ட பறம்பு மலை. இந்த மலை வளமான மலை. உழவர் உழாமலே உண்டு வாழக்கூடிய உணவுப் பொருள்களை வழங்கிய மலை. “உழவர் உழாதன நான்கு பயனுடைத்து” என்று போற்றப்பட்டுள்ளது. நான்கு பயன்படு பொருள்கள் என்னென்ன? ஒன்று - மூங்கில் அரிசி, இரண்டு - வள்ளிக் கிழங்கு மூன்று - தேன், நான்கு - பலாப்பழம். இங்ங்ணம் வளம் கெழுமிக் கிடந்த பறம்பு நாட்டின் நிலை என்ன? வானில் உள்ள மீன்களைப் போல் பறம்பு மலையில் நீர் ஊற்றுச் சுனைகள்! அருவிகள்! இன்று பறம்பு மலையின் நிலை என்ன? அன்றையப் பறம்பு மலையை நினைத்துப் பார்க்க வேண்டாமா? மீண்டும் வளமான பறம்பு மலையைக் காண வேண்டாமா?

சங்க காலக் கவிஞன்,

ஓரில் நெய்தல் கறங்க ஓரில்
ஈர்ந்தண் முழவின் பணி ததும்பப்
புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
பைதல் உண்கண் பணிவார் புறைப்பப்
படைத் தோன் மன்ற, அப் பணியிலானன்!
இன்னாது அம்ம, இவ் வுலகம்
இனிய காண்க, இதன் இயல் புணர்ந் தோரே!

(புறம் 194)

என்று பாடினார். ஒரு வீட்டில் துக்கம்; ஒரு வீட்டில் மகிழ்ச்சி! ஏன்? என்று வினவுகிறார். இரண்டும் கடவுள் படைப்பு என்று கூறுகின்றனர். துக்கம் - மகிழ்ச்சி என்று