பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உணர்வுகளைப் பெற்றவன். ஆனால் இன்றோ, ஒழுக்க நடையும் தளர்ந்து வருகிறது. அவ்வழி ஒழுங்கும் நிலை பெறவில்லை. ஏன் இந்த நிலை? ஒழுக்கம் ஆகியவைகளையும் கூடப் பரந்த நிலையில் இயல்புகளுக்கேய்ந்தவாறு நோக்காமல் சிறிய எல்லைக்குட்பட்ட தன்னல நோக்குடனேயே நிர்ணயிக்கத் தலைப்பட்டுவிட்டார்கள். இன்று ஒருவர் ஒழுக்கமென்று கூறுவது பிறிதொருவருக்குத் துன்பமாகவும், தொல்லையாகவும் இருப்பதைக் காண்கின்றோம். இந்த அவல நிலைக்குக் காரணம், மனித குலத்திடையே ஒருமைப் பாட்டுணர்வு வளராமையேயாம். அவ்வழிப்பட்ட அன்பும் அரும்பி மலரவில்லை-மனமாற்றத்திற்கு அடிப்படையான கருத்துப் புரட்சியும் ஏற்படவில்லை.

ஒழுக்கத்தினின்று ஒழுங்கு தோன்றுகிறது. இது தொடக்கநிலை - அறிவு நிலை. பின் ஒழுங்கிலிருந்து ஒழுக்கம் தோன்றுகிறது. இது வழி நிலை-பயிற்றிக் கொள்ளும் நிலை. முன்னையது புலன்களின் சார்புடையது-பின்னையது பொறிகளின் சார்புடையது. முன்னையது சுதந்திரமானது-பின்னையது அஞ்சியும் செய்யலாம். ஒழுங்குநெறி கற்றுக் கொடுக்க முற்றிலும் தகுதிப்பாடுடையவன் இயற்கையென்ற பேராசிரியன். ஆனாலும், மனிதனிடத்தில் கற்றுக்கொள்ளும் உணர்ச்சியைவிட அனுபவிக்கும் உணர்ச்சியே மேலோங்கிற்று. அவன் இயற்கையிலிருந்து பாடம் படித்துக் கொள்ளத் தவறிவிட்டான். ஆனாலும், அடக்கியாண்டு அனுபவித்துக் கொண்டு வருகிறான். எதையும் அனுபவிக்க வேண்டும் என்ற உணர்வு, ஆசையை வளர்க்கும். அவ்வழி, விரும்பத் தகாத போட்டாப் போட்டிகள் தோன்றும். ஒழுக்கம் உறுதியற்றுப் போய்விடும்; ஒழுங்கு நிலைதடுமாறும்.

இயற்கையிலிருந்து ஒழுக்கத்தையும் ஒழுங்கையும் கற்றுக்கொள்ளத் தவறிவிடும் மனிதனுக்கு ஒழுங்கைக் கற்றுக் கொடுப்பது சமுதாயம். அந்தப் பரந்துபட்ட சமுதாயக் குடும்பம் என்ற நிலைக்களனிலிருந்து மனிதன் ஒழுங்கைக்