பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

165


கற்றுக் கொள்ளுகிறான். பாரம்பரியம் என்பது உணர்ச்சிகளின் சங்கிலி-உணர்ச்சிகளின் பிரதிபலிப்பு. இது எங்கோ ஒரோ வழிதான் மாறும். பெற்றோர் சமுதாயம் பெருமைக்குரியதாக அமையாது போனால் ஒழுங்குகள் மாறும். அவை உறுதிக்கொள்ள முடிவதில்லை. ஒழுங்குகள் கால்கொள்வதில்லை. அஞ்சல் தலையில் ஒட்டுதற்குரிய பசையுண்டு. எனினும், அதுவே ஒட்டுதற்குப் போதாதது. அதற்குப் புறச் சேர்க்கையாகச் சிறிது தண்ணீரும் தேவை. அதுபோல, தனி மனிதன் தன் சிந்தனையாலும் அறிவினாலும் ஒழுங்கைக் கடைப்பிடிக்க எவ்வளவுதான் முயற்சித்தாலும் அதைக் காப்பாற்றிக்கொள்ளப் பெற்றோர் சமுதாயத்தின் ஒழுக்க முறை துணை செய்யாவிட்டால் பயனில்லை. இன்றையச் சூழ்நிலையில் பள்ளிக்கூடத்திற்கும் வீட்டிற்கும் போர் நடந்து கொண்டிருக்கிறது. ஆசிரியர்களும் பெற்றோர்களும் இரு அணிகளாகப் பிரிந்து நின்று போர் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இந்தப்போர் இன்றோ நேற்றோ தொடங்கியதல்ல. ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. இந்தப் போராட்டத்தில் ஆசிரியர் உலகம் தொடர்ந்து தோல்வியையே கண்டு அனுபவித்து வருகிறது. அது ஒருபொழுதும் வெற்றிபெற்றதில்லை. பள்ளிக் கூடத்தில் சொல்லிக் கொடுப்பதற்கு மாறான வாழ்க்கையையே வீட்டிலும், நாட்டிலும் நாம் காண்கின்றோம். அதனாலன்றோ, ‘பள்ளிக் கணக்கு புள்ளிக்குதவாது’, ‘ஏட்டுச் சுரக்காய் கறிக்குதவாது’ என்ற பழமொழிகள் தோன்றின! பெற்றோர் சமுதாயம் மனம் வைக்க வேண்டும். நேற்றைய அனுபவத்தின் விளைவாக வரும் அறிவோடியைந்த வாழ்க்கையை விரும்பி ஏற்றுக்கொள்ளவேண்டும். தம்முடைய குழந்தைகளும் அதனை ஏற்றுக் கொள்ளும்படி முயற்சி செய்ய வேண்டும். நன்றல்லவற்றை ஒதுக்க வேண்டும். நன்றுடையாராக இருந்தால் மட்டும் போதாது. தீமையைக் கடிந்து விலக்கும் ஆற்றலுடையராகவும் இருக்க வேண்டும்.

கு.XIII.12.