பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

169


மனிதர்களுக்கு இயற்கையாலும் விலங்குகளாலும் அயலவர்களாலும் அச்சம் இருந்த வரையில் சமூக அமைப்பு விரைந்து உருப்பெற்றது; வளர்ந்தது. ஏன், பாதுகாப்புக்குச் சமூக அமைப்பும் வலிமையும் தேவைப்பட்டன. சமூக அமைப்பு தோன்றி வளர்ந்ததில் பொருள் உற்பத்தி முறைக்கு மிக முக்கியமான பாத்திரம் உண்டு. பொருள் உற்பத்திக்குக் கூட்டு முயற்சியே எளிதாயிற்று. ஆதலால், பொருள் உற்பத்தி செய்து வாழ்வை இயக்க, சமூக அமைப்பு தேவைப்பட்டது. உற்பத்தி செய்த பொருள்கள் பணமாக மாற்றம் பெறும் வரலாற்றுக் காலக் கட்டத்தில் மனிதகுலம் மாற்றம் அடைந்தது. இந்நிலையில், மெல்ல சமூக அமைப்பு நிலைகுலையத் தொடங்கியது. சொத்துரிமை தோன்றிய காலமும் இதுவே! பணமதிப்பீட்டுச் சமூகம், சொத்து மதிப்பீட்டுச் சமூகம் தோன்றியவுடன் சமூக அமைப்பில் சரிவுகள் தோன்றின. சமூகக் கட்டுக்கோப்பு நெகிழத் தொடங்கியது. ஏன், சமூக அமைப்பு இல்லாமலே போகும் நிலை உருவாயிற்று. காலப்போக்கில் 'சமூகம்' என்ற அமைப்பு, வடிவத்தால் அமைந்து உணர்வாலும் பயனாலும் இல்லாமலே போய்விட்டது. சில இடங்களில் சமூகம் என்ற அமைப்பு வல்லாளர் வயப்பட்டுத் தீய வடிவம் பெறலாயிற்று.

சமூக இயக்கத்திற்கு - அமைப்பிற்கு அறிவியலே அமைப்புச் சாதனம்; இணைப்புக்கருவி. அறிவு அல்லது அறிவியல் என்பது என்ன? ஒன்றை, ஒரு நிகழ்வை அறிவியல் பார்வையில் அணுகுவது அறிவியல், "Attitude" "Approach" என்பர். கற்றறிந்த செய்திகளின் தொகுப்பு அறிவியல் ஆகாது. ‘சமூகம்’ அறிவியல் அடிப்படையில் இயங்கினால், சீராக இயங்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதிலும் தெரிந்து கொள்வதிலும் தான்-ஒத்திசைந்து வாழ்வதிலும்தான் சமூகம் என்ற அமைப்பு தோன்றுகிறது; வளர்கிறது. காரியங்களைப் பற்றிய கவலையால் யாது பயன்? காரணங்களைப் பற்றிய