பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கவலையே அறிவியல் சார்ந்தது. கவலையை மாற்றும் கருத்துருவமே அறிவியல். ஒவ்வொருவருக்கும் சொந்த விருப்பங்கள் உண்டு. ஒருவர் தமது விருப்பங்களை மட்டுமே நிறைவேற்றிக் கொள்ள முயன்றால், சமூகம் என்ற அமைப்பு இருக்காது. உருக்குலையும். ஒருவர், மற்றவர்களின் விருப்பங்களை அறிந்து அவை நிறைவேறத் துணை செய்தலே அறிவியல் சார்ந்த சமூக வாழ்வியல்முறை.

சமூகம் என்பது ஓர் அளவினதாகிய ஒரு கட்டுக் கோப்பிற்குள் அமைந்து இயங்கும் மனிதக் கூட்டமாகும். தொடக்க காலத்தில் யாதொரு வேறுபாடுமில்லாது குறிப்பிட்ட ஓர் இடத்தில் வாழும் கூட்டமாக இருந்தது. பின் காலப்போக்கில் சாதிகளானது. பல குடும்பங்கள் ஒத்ததறிந்து வாழ்வது சமூகம். ஒப்புரவு நெறி நின்று ஒழுகும் மக்கள் தொகுதியே சமூகம். இத்தகு சமூக அமைப்பை ஓயாது இயக்கிக் கொண்டிருக்கும் ஆற்றல்களே அன்பும் தேவையுமாகும். அன்பு, மற்றவர் வாழ்தல் வேண்டும் என்ற விருப்பார்வத்தில் இயங்கும் உயிர்ப்பண்பு. அன்புக்கு, "நான்" இல்லை, "நாம்" உண்டு! அன்பின் சந்நிதியில் ‘எனது’ இல்லை; ‘நமது’ உண்டு! ஆம்! அன்பினால் கூடி வாழும் சமுதாயம் கூட்டுடைமைச் சமுதாயம்! உண்பித்து உண்ணல், வாழ்வித்து வாழ்தல், மகிழ்வித்து மகிழ்தல் என்ற உயரிய பண்பு அன்பாகும். இந்த அன்பு அறிவியல் சார்ந்த நிலையில் இயங்கும் பொழுது சமூகம் தோன்றும். இத்தகு சமூகம் நிலைபெறும்; வாழும்!

மனிதகுலம் என்னும் தேர் உருண்டோடுவதற்கு அச்சாக அமைவது பொருளேயாம். மனிதகுலம், பொருளுற் பத்தி நெறியால்தான் வளர்ந்து வந்துள்ளது. பொருள் உற்பத்தியில் அறிவியல் சார்ந்து அவரவர் பங்கேற்பைப் பெறுதல், செய்தல், பொருள் நுகர்வில் வேற்றுமையை அகற்றுதல் முதலியன பொருளியல் சார்ந்த அறிவியலாகும். இயற்கை அமைவில் சமூகத்தின் உறுப்பினர் அனைவரும்