பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

171


அனைத்துத் திறனும் முழுதுமாகப் பெற்றிருப்பதில்லை. ஒருவர் தேவை. மற்றவர்களால் நிறைவு செய்யப்பெறுவதே அறிவியல் சார்ந்த உழைப்புமுறை; உற்பத்திமுறை. பொருள் செய்தலிலும், நுகர்தலிலும் இத்தகு அறிவியல் நோக்கு அமையின் சமூகம் சிறப்பாக அமையும்; இயங்கும்.

சமூக அமைப்பு, சீராக அமைந்து விளங்கிடச் சுற்றுப் புறச் சூழ்நிலை நன்கு அமைய வேண்டும். சுற்றுப்புறச் சூழ் நிலை என்பது பலவகை. அவற்றுள் மூன்று பெரும் பிரிவுகள் கவனத்திற்குரியன. அவை நம்மைச் சுற்றியுள்ள இயற்கை அமைவாகிய நிலம், தண்ணீர், காற்று ஆகிய மூன்றுமாகும். இயற்கைச் சூழலாகிய இவற்றைத் தூய்மையாகப் பேணவேண்டும். இவை, உடல்நலமுற இயங்குவதற்கும் வாழ்வதற்கும் தேவை.

முதலாவது நிலம். மானிட வாழ்வுக்கு நிலம் அடிப்படை நிலம், மண்ணரிப்பு நோய் முதலியவற்றிற்கு ஆளாகாமல் பேணப்பட்டால்தான் மானிட வாழ்வுக்கு உணவும் உடையும் கிடைக்கும் நிலத்தைப் பேணுதல் என்பது பயன்படுத்துதலிலேயே அமைந்திருக்கிறது. நிலத்தைப் பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்தாலே போதும்! நிலம் தன்னியல்பில் சிறந்து விளங்கும் தன்மையது. மனிதன், தன் வாழ்விற்காகவேனும் நிலத்தைப் பேணவேண்டும் என்ற அறிவியல் உண்மையை அறிந்திருந்தால் இன்று நமது நாட்டில் இலட்சக்கணக்கான ஹெக்டேர் நிலங்கள் மண்ணரிப்பு நோய்க்கு ஆளாகியிரா. ஆதலால் சமூகம் என்ற அமைப்பு நிலைத்து வாழ்ந்திட நிலம் பயன்படுத்தப்பெறுதல் வேண்டும்.

நிலமகள் திருமேனியில் பசுமை ஆடைபோர்த்த வேண்டும். நிலமகள் முகத்தில் அழுக்குகளை, கழிவுப் பொருள்களை இட்டு அவளை அவலப்படுத்தாதீர்கள்! எல்லாக் கழிவுகளையும் சோம்பல் பாராமல் அவள் மடியில் வைத்துக் கட்டுங்கள்! அதாவது,