பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நிலத்தில் குழிவெட்டிக் கழிவுப் பொருள்களை அந்தக் குழியில் போட்டு மூடுங்கள்! அவள் அவற்றை உரமாக்கிப் பொன்மதிப்பில் உங்களுக்கே தந்து மகிழ்வாள்! தொற்றுநோய் குறையும்; வளம்

கொழிக்கும்; இயற்கை எழில் பூத்துக் குலுங்கும்!

இரண்டாவது, தண்ணீர்! நீரின்றமையாது உலகியல் வாழ்க்கை தண்ணீர் அற்புதமான பொருள். உலகில் மிகக் குறைவாகக் கிடைப்பது தண்ணீர். நமது மக்கள் “தண்ணீர் பட்ட பாடு” என்று பொருள்களையும் பணத்தையும் வீணாக்குவதைப் பார்த்து உவமையாகக் கூறுவர். இது தவறானது. தண்ணீர் மனிதகுலத் தேவைக்குப் போதிய அளவு கிடைக்கவில்லை. அதனால்தான் அடிக்கடி வறட்சி, பஞ்சம் முதலியன ஏற்படுகின்றன. எனவே, தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்; தூய்மையாகப் பேணவேண்டும். "தாயைப் பிழைத்தாலும் தண்ணீரைப் பிழைக்காதே" என்ற பழமொழியினைத் தேறுவீர்! நிலம்போலத் தண்ணிர் பொறுத்தாற்றும் இயல்புடையதன்று. தண்ணீரை நாம் கெடுத்தால் நாம் கெடுதல் - அழிதல் உடனடியாக நிகழும். ஆதலால், சமூக அமைப்பு நலமுடன் இயங்கத் தண்ணிரின் துய்மையைக் காப்பாற்ற வேண்டும். மேலும் மேலும் தண்ணீர் வளத்தைப் பெறக் காடுகளைப் பேணவேண்டும்.

மூன்றாவது, காற்று! காற்று இயக்கத் தன்மை உடையது. மூச்சுக் காற்றின் உயிர்ப்பிலேயே வாழ்வு அமைந்து கிடக்கிறது. இம்மூச்சுக் காற்றினை மாசுபடாமல் பாதுகாத்தல் வேண்டும். நிலம், நீர் இவற்றின் துய்மையில் ஓரளவு காற்றின் தூய்மையும் அமையும். ஆயினும் ஆலைப்புகை முதலியவற்றால் காற்றுகெடாமல் பாதுகாக்கப் பெறவேண்டும்.

அடுத்தது, சமூக இணக்கங்கள் - உறவுகளுக்குரிய சூழல். இஃது ஆன்மா சம்பந்தமுடையது. புறத்தூய்மை