பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

173


செய்தால் போதாது. ஆன்மாவையும் சுத்தம் செய்தல் வேண்டும். ஏன்? ஆன்மாவைச் சுத்தம் செய்தலில் சமூக உறவு அரும்பும்! ஆதலால், சமூக உணர்வுகளும் உறவுகளும் வளரத்தக்க வகையில் ஆன்மா வளர்க்கப் பெறுதல் வேண்டும். எவ்வளவு பெரியமனிதராக இருந்தாலும் தனிமனிதராக வாழ்தல் இயலாது. அவருடைய வாழ்வு சீராக அமையக் குலம் தேவை, சுற்றம் தேவை ஊர் தேவை. எந்தக் குடும்பத்தில் நல்ல மனைவி, மக்கள் வாழ்கின்றனரோ, அந்தக் குடும்பத்தில் முதுமை இல்லை; நோய் இல்லை இன்பம் பொதுளும். எங்கே நினைப்பினை முடிக்கும் அலுவலர்கள் உள்ளனரோ, அங்கே பணிகள் சிறப்புற நடைபெறும்; வளம் பெருகும்; வாழ்வு சிறக்கும்; மகிழ்ச்சி பெருகும். எந்த ஊரில் ஆழ்ந்த அனுபவங்களின் வழி புலன்களும், பொறிகளும் பக்குவப்பட்ட சான்றோர். இருக்கிறார்களோ, அந்த ஊரில் பல்குழு இருக்காது; பகை இருக்காது; மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். இது சமூகச் சூழல்! இத்தகைய சூழல் அறிவியல் அடிப்படையில் அமைந்தால்தான் நிலைபெற்று இருக்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுவதற்குரிய அறிவியல் சார்ந்த திறன் தேவை. இன்று, நமது நாட்டில் நிகழும் கொலைகள், தற்கொலைகள், கலகங்கள், சண்டைகள் ஆகிய அனைத்திற்குமே காரணம் நம்முடைய சமூக வாழ்க்கை அறிவியலைச் சார்ந்ததாக அமையாததேயாகும்.

அன்பு என்பது உயிர்ப்புள்ள, ஆற்றல்மிக்க பண்பாகும். அன்புதான் முறையான, நிறைவான வாழ்வின் அடையாளம் ! அன்பு செய்தல் எளிதன்று. அன்புடையராய் வாழ்தல் அருமையான அறிவியல் சார்ந்த முயற்சி. அன்பு செய்து வாழும் வாழ்க்கைக்கு அன்பு செய்தலைத் தவிர வேறு நோக்கம் இல்லை. அன்பு செய்தலை வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டவர்கள் அனைவரும் அல்லற்பட்டுள்ளனர். இஃது உலகியற்கை ஆயினும் அவர்களுடைய