பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


புகழ் நிலைத்து நிற்கிறது! நாம் இந்த மனித குலத் தொகுதியினை, மற்ற உயிர்க்குலத் தொகுதியினைப் புரிந்துகொண்டு, அவை நலமுற்று வாழ அன்பு செய்தல் வேண்டும்; தொண்டு செய்தல் வேண்டும். அறிவியல் சார்ந்த வாழ்க்கைக்கு அன்பே குறிக்கோள்!

ஆன்மா புலன்கள், பொறிகள் ஆகிய கருவிகளுடன் அமைந்த உடலுடன் கூடிவாழத் தொடங்கிய நாள்முதல், பொருள் இன்றியமையாததாகிவிட்டது. ஆதலால், வாழ் வாங்கு வாழப் பொருள் தேவை. துய்ப்பனவற்றின் வழியில் தான் உய்ப்பனவும் வந்தமைகின்றன. பொருளில்லார்க்கு இவ்வுலகமுமில்லை; அவ்வுலகமுமில்லை. இந்த உண்மையே அறிவியல் சார்ந்த உண்மை. பொருள் என்பது பணம் அல்ல; உண்டு, தின்று, உடுத்து வாழ்வதற்குப் பயன்படும் நுகர் பொருள்களே, பொருள்கள்! இவை உழைப்பால் வருவன; விலைமதிக்க இயலாதன. உண்மையில் பணத்திற்கு மதிப் பில்லை. வேளாண்மைத் தொழில், கால்நடை வளர்த்தல் ஆகியன பொருள் செய்யும் நெறிகளில் சிறந்தனவாகும். உழைத்துப் பொருளிட்டலே அறிவியல் சார்ந்த வாழ்வியல் முறை. அங்ஙனமின்றிப் பிறர் பங்கைத் திருடுதல், பணத்திலிருந்து நேரடியாகப் பணம் பண்ணுதல், கலப்படம், கொள்ளை முதலியன மூலம் பணம் திரட்டல் அறிவியல் முறையல்ல. அதுமட்டுமன்றிப் பெறும் பொருளுக்கேற்ப உழைப்பினைக் கொடுக்காது பொருளை நுகர்தலும் கூட அறிவியல் பார்வையில் குற்றம்தான்! அறிவறந்த ஆள்வினை வழிப் பொருளிட்டி வாழ்தல் சமூக அமைப்புக்குத் துணை செய்யும்!

உடல், உழைப்பினால் ஆயது; உழைப்புக்கு உரியது; உழைப்பினால் வளர்வது பேணப்படுவது. உழைப்பின்மையாலேயே அறியாமை. வறுமை, நோய், கலகம், போர்! இத் தீமைகளிலிருந்து சமூகம் விடுதலை பெற, உழைப்புத் தேவை. உழைப்பு, அறிவியல் சார்ந்த தொழில் நுட்பமாக அமைதல்