பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


முயற்சி. பொருளீட்டலிலும் அறிவியல் பாங்கு வேண்டும். அந்தப் பொருளை நுகர்தலிலும் அறிவியல் பாங்கு தேவை. மற்றவர் - அயலவர் உண்ணாதிருக்கும் பொழுது நாம் மட்டும் உண்பது நெறியும் அன்று; முறையும் அன்று. அதுமட்டுமல்ல. பாதுகாப்பும் இல்லை. அயலவன் விழித்து எழுந்தால் நமது நிலை பாதிக்கும். ஆதலால், வாழ்வு அறநிலையப் பாதுகாவல் (Trusteeship) வாழ்வாக வேண்டும் இந்த வாழ்க்கை முறையை அப்பரடிகள் எடுத்துக் கூறினார்; அண்ணல் காந்தியடிகள் வழிமொழிந்தார். பாவேந்தன் பாரதிதாசனும் "உலகம் உண்ண உண், உடுத்த உடுப்பாய்" என்றான்! செல்வத்தின் பயன் ஒப்புரவு வாழ்க்கை. பொருளீட்டல் தாம் வாழ்வதற்காகத்தான் என்பது அறிவியல் கருத்தன்று. பொருளிட்டும் வாழ்க்கையே கூடச் சமூக வாழ்க்கைதான்! மற்றவர்களுக்கு வழங்கி, மகிழ்வித்து மகிழ, வாழ்வித்து வாழப் பொருள் தேவை என்பதே பொருளீட்டலுக்குரிய கரு. "இரப்போர்க்கு இல்லென்று இயைவது கரத்தல்" அறிவியலன்று அறமுமன்று. செய்வன செய்து பொருளிட்டி இரப்பார் துன்பத்தை மாற்றுவதே சமூகத்தின் பொதுநிலை. ஆதலால், பொருளிட்டல் என்பதூஉம் அறிவியல் பார்வையில் சமூக அமைப்பின் உயிர்ப்பேயாம்.

அடுத்து, சமூக அமைவில் அறிவியல் பாங்கில் வருவது ஆன்மிகம். ஆன்மிகம் என்பது இன்று இருப்பதைப் போல முற்றிலும் கடவுள் - மதச் சார்புடைய தத்துவமல்ல; கொள்கையல்ல. கார்ல் மார்க்ஸ், லெனின் முதலிய நாத்திக நெறியினரும் கூட, “ஆன்மா” “ஆன்மாவின் குணம்” என்ற சொற்களைக் கையாள்கின்றனர். ஆன்மீகம் என்பது ஆன்மாவின் தரத்தை - உயிரின் தரத்தை உயர்த்துதல் என்று பொருள்படும். ஆன்ம வாழ்க்கை என்றால், அக வாழ்க்கை என்பது கருத்து, அக நலவாழ்க்கையின் செழிப்புக்கு இசைந்தாற்போலத்தான் உடல் வாழ்க்கை அமையும். உடல்