பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



பசிதீர உண்பதும் உறங்குவதுமன்றி ஒன்றுமே இல்லை என்று எண்ணி வாழ்பவர்கள் பலர். மற்றும் பலர் ஆன்மிகம் என்ற பெயரில் மதங்களின் பாற்பட்ட மூடப் பழக்க வழக்கங்களில் சிக்கி அறிவை இழந்து ஆளுமையை இழந்து ஏன் ஆன்மாவையே இழந்து செத்தபிறகு போய்ச் சேரக்கூடிய இடத்தை தேடுகின்றனர். இந்த உலக வாழ்வை நரகமாக்குகின்றனர். இத்தகு இரங்கத்தக்க வாழ்வு, தமிழர் மரபன்று.

தமிழர் வாழ்வாங்கு வாழ ஆசைப்பட்டனர்; வாழ் வாங்கு வாழ இலக்கணம் கண்டனர்; ஆன்மாவை அறிந்திருந்தனர். ஆன்மாவின் தேவைகளையும் அறிந்திருந்தனர். உடல் வாழ்வு, ஊணால் ஆகும். உயிர் வாழ்வு-ஆன்ம வாழ்வு, மகிழ்வால் ஆவது இன்பத்தால் ஆவது, மகிழ்வும் இன்பமும் அறிவினை வாயிலாகக் கொண்டு வருபவை; அன்பினால் விளைபவை; அர்ப்பணிப்பில் விளையக்கூடியவை. இந்த உயரிய பண்புகள் ஆன்மாவின்கண் தலைப்பட்டு ஆன்மா - இயற்கையோடிசைந்த வாழ்வு வாழ்தல் வேண்டும்.

இயற்கையோடிசைந்த வாழ்வியலுக்கு ஆன்மாவை ஆயத்தப்படுத்துவது கலையுணர்வு. பொருளுடைய கலையே, வாழ்க்கையைப் பொருளுடையதாக்குகிறது. தமிழர் கண்ட கலைகள் பல. அவற்றுள் ஓவியம், சிற்பம், இசை ஆகிய மூன்று கலைகளிலும் தமிழர் நெஞ்சங்கள் இயல்பாக ஈடுபட்டுத் திளைத்தன. தமிழரின் கலைபயில் வாழ்வியலுக்குப் பழைமையான வரலாறு உண்டு. சங்ககால அரசர்களின் அவையில் உரிமை பெற்று விளங்கியவர்கள் புலவர்கள், விறலியர், பாவலர்கள் என்பதை சங்க இலக்கியங்கள் விவரிக்கின்றன. தமிழரின் இசை, பண்ணிசையாகும். பாடலும் பாடலுக்கிசைந்த பண்ணிசையம் தமிழர் தம் வரலாற்றில் வளர்ந்து செழுமை பெற்றன. உலகத்தின் பிறநாட்டு வரலாறுகளில் காணப்பெறும் கொடுங்கோல் மன்னர்களைப் போன்ற மன்னர்கள் தமிழக வரலாற்றில் இருந்ததில்லை. ஏன்? தமிழக மன்னர்களின் மனங்களும் தமிழர்களின் இதயங்களும் இசையால் பண்பாடடைந்தன.