பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

183




தமிழிசை தொன்மையானது. தமிழரின் இசைக் கருவிகள் பழமையானவை. விண்ணளந்து காட்டி விளை மறைக்கும் சிற்பங்கள் நிறைந்த எழில் மாடத்திருக் கோயில்கள், தமிழர் நாகரிகத்திற்கே தனியுரிமையுடையன. ஏழிசையாய் விளங்கும் தமிழிசை தமிழகத்தின் தனி இசைமரபு. தமிழர்தம் சமய வாழ்வில், கடவுட் பூசையில், படையல்கள் பெற்றிருந்த இடத்தைவிடத் தமிழோடு இசை கலந்த பிரார்த்தனைகளே சிறப்பிடம் பெற்றிருந்தன. “தமிழோடிசை பாடல் மறந்தறியேன்” என்ற அப்பரடிகள் அருள் நெறியும், “ஏழிசையாய், இசைப் பயனாய்” என்ற சுந்தரர் செந்தமிழும் இதற்குச் சான்று. தமிழர்தம் சமுதாய வாழ்வின் மையம் திருக்கோயில் நாகரிமேயாம். திருக்கோயில் நாகரிகம், கடவுளை மட்டும் மையமாகக் கொண்டு விளங்கவில்லை. சமுதாய உறவுகள், சிற்பம், ஓவியம், இசை, கூத்து முதலிய அருங்கலைகளும் திருக்கோயில்களை மையமாகக் கொண்டு சமுதாயம் வளர்ந்தன.

இடைக் காலத்தில் ஏற்பட்ட அயல் வழிக்கின் ழைவால் - ஊடுருவலால் தமிழர், தம் நிலை தடுமாறினர். தமிழிசை மெல்ல மறைந்தது. உயரிய மலையில் உள்ள ஒளி விளக்கு தன்னைச் சுற்றிலும் உள்ள இருளை இரிந்தோடச் செயதல்போல், தமிழர் வாழ்வில் படிந்த இருளை இரிந்தோடச் செய்து, தமிழிசையை வளர்த்துப் பாதுகாக்க, செட்டி நாட்டில் அண்ணாமலை அரசர் தோன்றினார். தமிழிசை, புத்துயிர் பெற்றது. தமிழிசை தமிழகத்தின் மேடை களில் இடம் பிடித்தன. தமிழிசையைக் காத்த பெருமை இந்த நூற்றாண்டில் செட்டிநாட்டரசர்களுக்கே உரியது.

தமிழில் சிந்திப்போம்! தமிழ் வாயிலாகக் கற்போம்! தமிழிசையில் பாடுவோம்! பண்ணுடன் கலந்த பாட்டிசைப்போம்! தமிழகத்தை வளப்படுத்துவோம்! வளர்ப்போம்!