பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

189



ஆனால் அவ்விளக்கொளி என்னைச் சுற்றிலும் பரந்து கிடக்கின்ற இருளை நீக்கி ஒளி தந்து வாழ்வு தராமல் விளக்கிடத்தையே தேங்கிக் கிடக்கும்படி திரையிட்டு மறைக்கப்பயன்படுமானால், விளக்கினை விரும்புவார் யார்? அது போலவே கோயில்கள் வேண்டும். அத்திருக் கோயில்களுக்குள் கருணையின் சின்னமாய் நின்றிலங்கும் திருவருள் நாற்றிசைகளிலும் பரவி, இருள் விலக்கி, துன்பத்தின் தொடர்பறுத்து, இன்பம் பயத்தல் வேண்டும். அதனால் அன்றும் இன்றும் என்றும் விளக்கு சுடர்விட்டு எரிகிறது; விளக்கொளியும் கடிதில் சுற்றிலும் பாய்கிறது. அத்தன்மை அவ்விளக்கின் இயற்கை இயல்பு. எனினும் தன்னலமுடையார் சிலர் அச் சுடரொளிக்குத் திரையிட்டு மூடித் தனக்கே உரியதாக்கி, தன் வாழ்வுக்கே பயன்படுத்திக் கொள்ளுகின்றனர். அது விளக்கினுடைய குற்றம் கிடையாது. தன்னலமுடையார் செய்த குற்றமிது. அதுபோலவே எங்கும் பூரணமாய்ப் பொங்கித் ததும்பும் திருவருளை எங்கெங்கோ சிறைப்படுத்தி, தனிப்பட்டோர் வாழ்வு வளப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக சமரசத்தின் அடிப்படையில் சமதர்ம சமுதாயத்தைக் காணும் நோக்கத்தோடு ஏற்படுத்தப்பட்ட சமயமும் திருக் கோயில்களும் சுயநலக்காரர்களின் பாசறையாக மாறின. இத் துறையில் விபரீத உணர்வுகள் இடையிலே புகுத்தப்பட்டன. இவ் விபரீத உணர்ச்சிகளை எதிர்த்துப் போராடும் இயக்கத்தைத்தான் பெரியார் அவர்கள் தொடங்கினார்கள். இச்சமயத்தில் நாம் ஒன்றைக் குறிப்பிடாமல் இருக்க முடிய வில்லை. அது, எதிர்ப்பு எங்கோ தொடங்கி, எங்கோ சென்று முடிந்திருக்கிறது என்பதுதான். உண்மையிலேயே பெரியார் அவர்களுடைய எண்ணமும் அதுதானோ என்னவோ என்பது நமக்குத் தெரியாது. ஆனால் பலர் அவ்விதமே நினைக்கின்றனர். அதாவது பெரியார் அவர்கள் சமய நெறியின் எதிர்ப்பாளர்; திருக்கோயில்களை உருக்குலையச் செய்பவர்; பரம்பொருளின் பரம விரோதி என்பனவாம்.