பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

பாவனை சொல் செயல் பேச்சு எழுத்து எல்லாவற்றிலும் அப்படியே அடிகளாரைப் பின்பற்றி, அடிகளாருக்குச் சரியான வாரிசு என்பதை நிரூபித்து வருகிறார்கள். நாம் (ஊரன் அடிகள்) அடிகளாருக்கு வாரிசாக, இளவரசாக, அடுத்த 46-ஆம் பட்டமாக வருவதென்பது ஒரு காலத்தில், அடிகளாரின் மணிவிழாவுக்கு முன்னும் பின்னுமான ஆண்டுகளில், அடிகளாரின் அழைப்புக்கு நாம் இசைந்து, நாங்கள் இருவரும் கொண்டிருந்த திட்டம். திருவருள் திட்டம் என்ற அடிகளார் இதனைக் கூறுவார்கள். பின்னாளில் அதே திருவருட் செயலால் இத்திட்டம் மாற்றப் பெற்றது. எவ்வளவு நல்லதாய்ப் போயிற்று என்பது இப்போதுதான் தெரிகிறது. அடிகளாரின் இடத்தை அதே பாணியில் திருவருள்திரு பொன்னம்பல அடிகளார் நிறைவு செய்யும் அளவுக்கு எம்மால் நிறைவு செய்ய இயலாது. "அடிகளார் வழங்கிய அருட்கொடைகளில் தலையாயது அவரது வாரிசு பொன்னம்பல அடிகளார் ஆவார்" என்று அன்பர் ஒருவர் தினமணி இதழுக்கு எழுதிய ஆசிரியர் கடிதத்திற் குறிப்பிட்டிருப்பது முற்றிலும் உண்மை.

பொன்னம்பல அடிகளார் பட்டமேற்றபின் செய்யத் தொடங்கிய முதற்பணிகளுள் அடிகளார் நூல்வரிசை வெளியீட்டு ஏற்பாடும் ஒன்று என்பது பெரிதும் பாராட்டத்தக்கது. பாதிப்பாசிரியர் குழு உறுப்பினர்களுள் மூவர் நம்மால் நன்கறியப் பெற்றவர்கள். தமிழாகரர் தெ. முருகசாமி அவர்கள் காரைக்குடியில் தமிழ் வளர்த்தவர். கம்பனைக் கணேசன் உளர்த்தார் என்றால் தமிழை முருகசாமி வளர்த்தார். எழுத்துச்செம்மல் குன்றக்குடி பெரிய பெருமாள் அடிகளாருக்கு அடுத்தநிலையில் குன்றக் குடியாற் பெயர் பெற்றவர். உண்மையிலேயே எழுத்துச்செம்மல், திரு.மரு. பரமகுரு அடிகளாரின் தனிச்செயலாளர், ஆதீனத்தின் தலைமைப் பணியாளர். அடிகளாரின் வெற்றிக்குரிய காரணங்கள் பலவற்றில் பரமகுரு செயலாளராக அமைந்ததும் ஒன்று என்பது எமது கணிப்பு. இளைஞர் திரு. கதிரேசன் ஆதீனக்கவிஞர், திரு. நா. சுப்பிரமணியம் அவர்கள் ஆதீனப்புலவர். பதிப்புக்குழு செயலர் பதிப்புச்செம்மல் ச. மெய்யப்பன் அவர்கள் நூல் வெளியீட்டுத் தேனீ, களஞ்சிய வெளியீட்டுச் செல்வர். அவர் வெளியிடும் "குன்றக்குடி அடிகளார் நூல் வரிசை" நாட்டுக்கு ஒரு நன்கொடை.

அடிகளார் புகழ் வாழ்க! அடிகளார் பணிகள் தொடர்க! வெல்க!!