பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பலனைவிட அதிகமான பலனை அடைந்திருக்கிறார். அதற்குச் சான்று பல்வேறு மொழி பேசும் பல்வேறு இனமக்கள் வாழ்கின்ற இந்திய நாட்டின் அரசியல் உலகில் தமிழர் தலைவர் காமராசர் தலைமை பெற்றிருப்பதேயாகும். கடந்த பல ஆயிரம் ஆண்டுகளில் ஒருபோதும் தமிழனுக்கு இந்தப் பேறு கிடைத்ததில்லை. கிடைத்ததை இழக்காமல் தலைவர் காமராசரின் தலைமையைக் கட்டிப் பாதுகாப்பது தமிழரின் தலையாய கடமை என்பதைப் பெரியார் உணர்கின்றார்- உணர்த்துகின்றார். அதற்குரியவற்றையும் செய்கின்றார்-ஏன்? அண்ணல் காந்தியடிகள் தம் வாழ்நாளிலேயே நேருஜியைத் தலைவராக பாரத நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். அவர் பின் பாரத மக்கள் அணிவகுத்து நிற்கும்படி செய்தார். அதுபோல கோடான கோடித் தமிழர்கள் தம்மைத் தலைவர் என்று அழைத்தாலும், தந்தை என்று அழைத்தாலும், ஏவியதைச் செய்து முடிக்கக் காத்திருந்தாலும், அவற்றை யெல்லாம் உரிமையென்றோ, புகழ் என்றோ எடுத்துக் கொள்ளாமல் ‘தமிழர் தலைவர் காமராசர்; அவர் பின் அணி வகுத்து நில்லுங்கள்’ என்று நம்மை வழி நடத்துகின்றார் தந்தை பெரியார். இஃது பெரியார் அவர்களின் பெருமை யாவற்றுக்கும் மணி முடியாகத் திகழ்கிறது.

மக்கள் மன்றத்திலே நிலவும் சாதி வேற்றுமைகள் ஒழிய வேண்டும். அறியாமை நீங்கி அறிவு வளர வேண்டும். கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போகவேண்டும். மக்களிடையே நிலவும் ஏழை, பணக்காரர் என்ற வேற்றுமைகள் ஒழியவேண்டும். புதுமையும் பொதுமையும் கலந்த ஒப்பற்ற புதிய சமுதாயம் மலரவேண்டும். இவையே தலைவர் பெரியாரின் இலட்சியங்கள் இந்த இலட்சியங்களைத் திட்டமிட்டு நிறைவேற்றித் தருகின்ற ஆற்றல் படைத்த பெருந் தலைவர் காமராசர். இந்த ஒப்பற்ற தலைவர்கள் தலை முறையில், நம்முடைய நாடு விழித்தெழுந்து முன்னேறாது போனால் பின் எப்பொழுதுதான் முன்னேறப்போகிறது?