பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

197


மறக்கவோ முடியாது. எப்பொழுதுமே சமுதாயம் ஒரு புரியாத புதிர். சமுதாயத்தில் பரவலாகத் தன்னலச் சார்பும், அவ்வழிப்பட்ட அற்ப ஆசைகளும் மல்கிக்கிடப்பதை, நல்லோர் உணர்வர். தன்னலச் சார்பு ஒரு சமுதாயத்தினுடைய பொது உரிமைகளைக்கூட விட்டுக்கொடுத்துத் தன்னையும், தன்னுடைய சமுதாயத்தையும் இழிவுபடுத்திக் கொள்ளும் அளவுக்கு, இடம்பெறுவதை நடைமுறையில் காண்கின்றோம்.

செயற்கரிய செயல்

இத்தகு மனநிலை படைத்த சமுதாயத்தோடு பழகுவதும், அவர்களுக்குரிய நலன்களிலேயே நாட்டம் கொள்வதும் எளிமையான ஒரு செயலல்ல. நாம் எந்த இனத்தின் மானத்திற்காகப் பாடுபடுகிறோமோ, அந்த இனத்தைச் சேர்ந்தவர்களே-தன்னினத்தவர்களே-காட்டிக் கொடுப்பதை நடைமுறையில் பார்க்கிறோம். இத்தகு சோதனையான ஒரு பொது வாழ்வில், சற்றேறக்குறைய 40 ஆண்டுகளுக்கு மேலாகத் தலைவர் பெரியார் அவர்கள், பொதுவாழ்வில் ஈடுபட்டு, அப்பொதுவாழ்விலும் நிலை பேறாக நிற்கின்ற காட்சியைப் பாராட்டாமல் இருக்க முடியுமா? நம் வாழ்நாளிலேயே, இத்தகு பொதுவாழ்வில் ஈடுபட்டவர்கள். பொதுவாழ்வுத் துறையில் நிலைபேறாக நின்றமை, அருமையிலும் அருமை, தலைவர் பெரியார் அவர்கள் பொதுவாழ்வில் வெற்றிபெற்று விளங்குகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

சமயப் பெரியார்

தலைவர் பெரியார் அவர்களுடைய பொது வாழ்க்கையின் தொடக்கக் காலத்தில், சமயச்சார்பு நிறைய இருந்திருக்கிறது. அவர்களே ஒரு தடவை “ஞானியார் அடிகள் இவர்ந்து வந்த பல்லக்கைத் தூக்கி வந்ததாக


கு.XIII.14.