பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கருத்தினை நடைமுறைக்குக் கொண்டுவந்த பெருமை காமராஜ் அவர்களுக்கே உரியது. பட்டிதொட்டிகளிலெல்லாம் பள்ளிகள் திறக்கப்பெறுகின்றன. சோறும், துணியும் கொடுத்துக் கல்வி கற்றுக்கொடுக்கப்பெறுகின்றன. கல்விச் செல்வம் பொது உரிமையாக்கப்பட்டுவிட்டது. இந்தச் சாதனை வள்ளல்கள் வாழ்ந்த காலத்தில்கூட நிகழ்ந்ததாக வரலாற்றில் இல்லை.

அதுமட்டுமா, காடுகள் கழனிகளாகின்றன! செந்நெல்லும், செங்கரும்பும் செழித்து வளர்கின்றன! மண்ணடியில் மறைந்து கிடக்கும் மாண்புமிக்கச் செல்வங்கள் தோண்டியெடுக்கப்படுகின்றன! இத்தகு, வியத்தகு சாதனைகளைச் செய்து வருகின்ற தமிழக ஆட்சி நீங்காது நிலைபெற வேண்டு மென்று விரும்புகிற காரணம் இனநலக் கொள்கையேயாகும்.

பெரியார் அவர்கள், இன்று நடைபெறும் காமராசர் ஆட்சியானது, நமக்குக் கிடைத்தற்கரியது; இந்தக்காலம் பொற்காலம் என்கிறார்கள். இந்தப் பொற்காலத்திலேயே, மக்கள் தங்கள் தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்து கொண்டு, மேலான வாழ்வு வாழத் தவறிவிடக்கூடாது.

தன்மதிப்பு வளர்ப்பாளர்

பெரியார் அவர்கள் சுயமரியாதை உணர்வை ஆயிரக்கணக்கான தமிழர்களிடையே உருவாக்கி வளர்த்தார்கள். வாழுகின்ற மனித இனத்திற்குத் தன்மானமும், இனமானமும் இரு கண்கள்.

இத்தகு சுயமரியாதை உணர்வைத் தமிழர்களிடையே வளர்த்து, இனமானக் கொள்கைக்கும், இனநலக் கொள்கைக்கும் கால்கோள்செய்த தலைவர் பெரியார் அவர்களின் திருத்தொண்டினைப் பாராட்டுகின்றோம். நாம் சமயத் துறையில் ஆழமான பற்றும், நம்பிக்கையுமுடையோம்.