பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



38. [1]நினைவின் அலைகள்

மிழ்த்தாய் ஈன்றெடுத்த தனிப்பெரும் மாணிக்கமான நண்பர் ஜீவா இந்த நாட்டில் வாழ்ந்த-வாழ்கிற கோடானு கோடி மக்களிடம் பழகினார். அவருடைய பழக்கத்தைப் பெற்ற பேறு பெற்றவர்கள் வரிசையில் நானும் இடம் பெற்றது. பெரும் பேறே. அவருடைய பழக்கம் சுவடு பதிந்த பழக்கம்- உணர்வினாற் கலந்து ஒன்றித்துப் பழகிய பழக்கம்.

திருக்குறள் நட்பின் இலக்கணம் பேசுகிறது; வள்ளுவர் கண்ட இலக்கணத்திற்கு இலக்கியமாகத் திகழ்ந்தது ஜீவாவின் நட்பு.

பெரும்பாலான தமிழர்கள் வாழ்க்கையில், சராசரி காணப்பெறுகின்ற குறை, தங்களுடைய கருத்து வேற்றுமையைக் காழ்ப்பாக்கிப் பகைமையை வளர்த்துக் கொள்வது. ஜீவா அவர்கள் சித்தாந்த ரீதியாக கருத்து வேற்றுமையுடையவர்களிடத்துங்கூடக் கலந்து பழகும் சக்தி பெற்றிருந்தார். மேடையில்-எழுத்தில் தம்முடைய சித்தாந்தத்தோடு முரண்படுகின்ற கருத்துக்களைச் சாடும் பொழுது சுழன்றடிக்கும் சூறாவளி வீசும். ஆனாலும் புழுதி பறக்காது. மார்க்சீய சித்தாந்தத்தின் ஊற்றுக் களனாகவே, ஜீவா வளர்ந்து வடிவம் பெற்று வாழ்ந்தார்.

இந்திய தேசிய ஒருமைப்பாட்டினைத் தம்முடைய உயிரினும் இனிதாகப் போற்றினார். ஆனாலும், மொழி வழி நாகரிகத்தைத் தமது மூச்சாகவே கொண்டு திகழ்ந்தார். கம்பன், வள்ளுவன், பாரதி, ஆகியோரின் இலக்கியங்களை மார்க்சீய சித்தாந்தப் பார்வையில் பார்த்து விளக்க உரையாற்றுவதில் அவர் ஈடும் இணையுமற்றுத் திகழ்ந்தார். என்னுடைய தொடர்பு அவருக்கு ஏற்பட்ட பிறகு, திருமுறை இலக்கியங்களையும் அவர் அந்தப் பார்வையோடு பார்த்து


  1. பொங்கல் பரிசு