பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

215


பொருந்தாக் கருத்துக்களை மனம்நோகா வண்ணம் நயம்படக் கேலி செய்யும் நகைச்சுவை-இவர் தம் பேச்சின் சிறப்பியல்புகள். உரத்த குரலில் உறுதியான கொள்கை விளக்கம், ஆயினும் குழைந்த நெஞ்சு. பரிவு, பாசம் ஆகிய சொற்கள் இவர்தம் அரசியல் உலகத்தின் நாடி நரம்புகள். கட்டுப்பாட்டில் வளர்த்த கட்சிகள் உண்டு. முன்னை மூலதனத்தால் வளர்ந்த கட்சிகள் உண்டு. ஆனால் இவர்தம் சுற்றுவட்டமோ அண்ணா தம்பி என்ற பாசத்திலேயே வளர்ந்தது. இவரே திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்த தந்தை. இவரே அதை வளர்த்தவர். பதினைந்து ஆண்டுக்குள்ளாக ஒரு கட்சி தோன்றி மக்களிடை வளர்ந்து நாடாளும் கட்சியாக இடம் பெற்றது அரசியல் வரலாற்றிலேயே ஒரு சாதனை. வாழ்நாள் முழுவதும் சாதாரண மக்களுக்காகவே பரிந்து பேசினார்; எழுதினார்; போராடினார். தீண்டாமை ஒழிப்பும் சாதிகளற்ற ஓரின அமைப்பும் இவர்தம் இலட்சியமாக இருந்தன. இந்த சமுதாயத்தைக் காண இலக்கிய உலகத்தில் நெறிகண்ட இவரே அரசியல் சட்ட ரீதியாகவும் வழிவகை கண்டார். அரசியல் என்பது கரடுமுரடானது என்ற எண்ணம் மேலோங்கி வருகிற கால கட்டத்தில் அகனமர்ந்தமைந்த இவர் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். மக்களாட்சி மரபு சிறக்க எதிர்க் கட்சித் தலைவர்களையும் வீடுதேடிச் சென்று ஆதரவு கேட்டபண்பு போற்றுதற்குரியதாகும். சட்டசபையில் யாருடைய மனமும் நோகாமல் விடைகள் அளித்த பண்பு பாராட்டத்தக்கது. காலத்தின் வளர்ச்சியில் அவசியம் என்று கருதியபொழுது தற்பெருமை கருதி வீண் பிடிவாதமில்லாமல் நாட்டின் நலங் கருதி பழைய கோட்பாடுகளைவிட்டுப் புதிய கோட்பாடுகளை ஏற்று முன்னணியில் நின்றார் மூதறிஞர் அண்ணா துரை.

சீன ஆக்கிரமிப்பின்பொழுதும் பாகிஸ்தான் படையெடுப்பின்பொழுதும் அவர் காட்டிய பரந்த மனப்பான்மை