பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

216

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பாரதத்தின் தவப்புதல்வனாக்கியது. இந்தியாவிலேயே நடுவண் அரசிற்கும் மாநில அரசிற்கும் ஆளுங்கட்சிகள் மாறுபட்ட நிலையில் ஒரு இணைந்த ஒருமைப்பாட்டை உருவாக்கிய சாதனை பாராட்டத்தக்கது. இந்தியப் பேரரசின் ஒப்புதலுடன் இந்திய நாட்டின் பாராளுமன்றத்தின் முழு நிறைவு இசைவுடன் தமிழ்நாடு என்ற பெயர் நமது மாநிலத்திற்குச் சூட்டப்பெற்றது. பெயர் மாற்றத்தைவிட அதன் பின்னணியில் இருக்கின்ற அரசியல் இணைந்த உணர்வுச் சூழல் போற்றுதற்குரியது.

நிதானம் தவறாத ஓர் அரசியல் மேதை அவர். கண்ணியம், கடமை, கட்டுப்பாடு என்று ஆயுட்காலமெல்லாம் எடுத்துச் சொன்னார். வாழ்ந்தும் காட்டினார். அவர் யாரொருவரையும் கண்ணியப்படுத்தத் தவறியதில்லை. மதிப்பும் மரியாதையும் வழங்கத் தவறியதில்லை. யாரொருவருக்கும் நெஞ்சினாலும் தீங்கு செய்யாமல் வாழ்ந்தார். கடமையுணர்வினாலேயே மருத்துவர்கள் ஆணையை மீறிக் கடமைகளை மேற்கொண்டு காலனுக்கு ஆளானார். வளமனை படைத்துத் தந்தும், வறியோர் வாழும் நாட்டில் வளமனை ஏன்? என்று வாழ மறுத்து வருத்தத்திற்குரியரானார். நம்மையும் வருத்தத்திற்கு ஆளாக்கினார். என்ன செய்வது? அவர் ஆவி முழுவதும் கடமை வழிப்பட்டது. அவர் ஆணையிடுகிற கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டினைக் காப்பாற்றுங்கள். அவ்வழியில் நாம் நடந்து ஒழுகி அவர் விட்டுச் சென்றிருக்கிற பணிகளைத் தொடர்ந்து செய்வதே அவருக்குரிய நன்றிக் கடன். அவர் கடவுள் நம்பிக்கை யுடையவராக இருந்தாரா இல்லையா என்பதல்ல கேள்வி. ஆனால் ஒரு சிறந்த அருளாளராக வாழ்ந்தார் என்பதை நாம் எண்ணிப் பார்த்து அவர்தம் பணியினைத் தொடர்ந்து செய்வோமாக! அவர்தம் ஆள்காட்டிவிரல் சுட்டிக் காட்டிய வழியே நமது வழி. அண்ணா அவர்களின் ஆன்மா சாந்தியடைவதாக!