பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

218

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கண்டிப்பதில்லை. மறை மலையடிகள் காலம் தொட்டுத் தொடர்ந்து மறுத்தும். தேனினும் இனிய தென் தமிழில் மொழிக்கலப்படம் செய்வதைப் பலர் இன்னும் தவிர்க்கவில்லை; மாறாக, தனித் தமிழ் உணர்வைப் பலர் இன்னும் தகாத பாவ உணர்ச்சியாகவே கருதுகிறார்கள். ஐயா அவர்கள் தனித் தமிழுணர்வில் தலை சிறந்தவர்கள். ஐயா அவர்கள் எழுதிய உரை நூல்கள், கட்டுரைகள் ஆகிய அனைத்திலும் தனித்தமிழ்ச் சொற்களையே கையாண்டிருக்கிறார்கள். தத்து இயல்மரபுச் சொற்கள் பெரும்பாலும் வடமொழிச் சொற்களாகவே வந்து, தமிழில் சொற்கள் மறைந்தே போயின. தத்துவத் துறையில் தமிழ் வழக்குச் சொற்களைத் தமது பேச்சிலும் எழுத்திலும் கையாண்டு வழக்கத்திற்குக் கொண்டு வந்த தனித்தமிழ்க் காவலராகத் திகழ்கிறார்கள்.

தனித்தமிழ் மட்டுமல்ல, தமிழ் மரபுகளும் காப்பாற்றப்படவேண்டும்; தமிழ் நெறி காப்பாற்றப்படவேண்டும். “அசைவில் செழுந்தமிழ் வழக்கு அயல் வழக்கை வென்றேற” என்ற சேக்கிழாரடிகள் திருவாக்கில் ஐயா அவர்களுக்கு அசைவில் ஈடுபாடு உண்டு, ஐயா அவர்களின் சிந்தனை. சொல் செயல், அனைத்தும் தமிழ்மரபு பற்றியனவாகவே அமையும், அயல் வழக்குகள் ஐயா அவர்களுக்கு அயலேயாம்.

ஐயா அவர்கள் புறத்தோற்றத்தாலும், புலமையினாலும் சங்க காலத்துச் சான்றோர்களை நினைவூட்டிக் கொண்டிருக்கிறார்கள். எளிய தோற்றம்! ஏற்றமிக்கப் புலமை! சிவ வேடம் தாங்கிய திருக்கோலம்! சிந்தையில் சிவம் மனக்கும் பொலிவு! புலனழுக்கற்ற தன்மை! அருளார்ந்த கவர்ச்சி! தாயிற் சிறந்த பரிவு! அனைத்தும் ஐயா அவர்கள்! உரத்த குரல் ஒரு பொழுதும் எழுப்பாத உயரிய நா, புலமையாலும் செந்நா! உயர் செம்மைப் பண்பாலும் செந்நா! செல்வம் என்பது சிந்தையின் நிறைவே என்ற இலக்கணத்திற்கு